எழுத்திலும்,பேச்சிலும் வல்லவரான எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன், வாழ்ந்த காலத்தில் நேர்மையின் வடிவமாக வாழ்ந்தார் என்று அவருக்கான புகழஞ்சலியில் பலரும் குறிப்பிட்டனர்.350 நாவல்கள்,700 சிறுகதைகள்,30 நாடகங்கள் எழுதி 5 திரைப்படங்களுக்கு பணியாற்றிய எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன் கடந்த சில தினங்களுக்கு முன் தனது 66 வயதில் திடீரென இறந்துவிட்டார்.
அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டத்தை அவரது நண்பரான இசைக்கவி ரமணன் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடத்தினார்.நிகழ்வில் நடிகர் சிவக்குமார், அபிராமி ராமநாதன், எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர், காலச்சக்கரம் நரசிம்மன், சுபா, சேஷாத்ரி கண்ணன், பரணி, பேச்சாளர்கள் பாரதி, சுபா, இயக்குனர்கள் நாகா, நித்தியானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இந்திரா செளந்திரராஜன் படத்தை நடிகர் சிவக்குமார் திறந்து வைத்து மலர்துாவி மரியாதை செலுத்தினார் அவரைத்தொடர்ந்து நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் மலர்துாவி மரியாதை செய்தனர்.இந்திரா செளந்திரராஜனின் எழுத்தில் இருந்த நேர்மையும் சத்தியமும் அவரது வாழ்க்கையிலும் இருந்தது,ஒரு திரைப்படத்திற்கு கதை எழுத அவரை அழைத்து அவருக்கு ஒரு படத்தைப் போட்டுக் காண்பித்து இதைப் போல எழுத வேண்டும் என்றனர், இது போல காப்பி அடித்து எழுதுவதற்கு நான் எதற்கு என்று எழுந்து போய்விட்டார். அதே போல இன்னோரு படத்திற்கு கதை எழுதிக் கொடுத்துவிட்டார் அந்த கதைக்கு பணமும் வந்துவிட்டது ஆனால் கதையை படமாக்க முடியவில்லை,இந்திரா செளந்திரராஜன் கதைக்காக வாங்கிய பணத்தை திரும்ப அனுப்பிவிட்டார், கொடுத்த அட்வான்ஸ் பணம் திரும்ப வருவது என்பது திரைப்பட வரலாற்றிலேயே இல்லாதது, இதை செய்தவர் இந்திரா செளந்திரராஜன்,அவரிடம் நீங்கள் இதற்காக உழைத்திருக்கிறீர்கள் ஆகவே பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள் என்று எவ்வளவோ சொல்லியும் நான் கடவுளுக்கு கணக்கு சொல்லவேண்டும் ஆகவே எனக்கு இந்தப்பணம் வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார் என்று பல விஷயங்களை குறிப்பிட்டனர்.அவரைப் பற்றி பிரபலங்கள் சொன்ன விஷயங்களை தொகுத்து 'நினைவுப் பூக்கள்' என்ற புத்தகம் வந்திருந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.-எல்.முருகராஜ்.