உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / நிஜக்கதை / கேன்களில் சுமப்பது தண்ணீரல்ல, கண்ணீர்

கேன்களில் சுமப்பது தண்ணீரல்ல, கண்ணீர்

கொதிக்கும் அந்த வெப்பமான மணற்பரப்பில், செருப்பில்லாத தங்கள் பிஞ்சு கால்களில் ஒட்டியிருக்கும் சுடு மணலின் துகள்களை தட்ட நேரமில்லாமல் தங்களது துாக்கும் சக்திக்கு மீறிய தண்ணீர் கேன்களை சுமந்தபடி தட்டுத்தடுமாறியபடி இரு சிறுமிகள் சென்று கொண்டிருக்கின்றனர்.புத்தகங்களும் விளையாட்டு பொம்மைகளும் இருக்க வேண்டிய கைகளில் ஏன் தண்ணீர் கேன்கள்? யார் இவர்கள்?கடந்த ஒரு வருடமாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான கடுமையான போரால் காசா பகுதி முழுவதும் அழிவும் மனிதாபிமான நெருக்கடியும் நிலவுகிறது. வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உட்பட அத்தியாவசிய வசதிகள் பெருமளவில் சேதமடைந்ததால், லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.அப்படிப்பட்ட முகாம்களில் ஒன்றுதான் முஅவாசி. அங்கு தஞ்சமடைந்த பாலஸ்தீனக் குடும்பங்கள், அடிப்படை தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கின்றனர். அதில் மிகக் கடினமான சவால் தண்ணீர் பற்றாக்குறையே. குடும்பத்தின் உயிர்நாடியான தண்ணீரை பெற, அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் அலைகின்றனர்.“அப்பா இல்ல, அம்மாவால் முடியாது. அதுதான் நாங்கள் சுமக்கிறோம்,” என்று ஒரு சிறுமி சொல்கிறாள்; அவளின் குரலில் விரக்தி, வேதனை கலந்திருக்கிறது. போர் அவர்களின் சிறுவயதைக் கசக்கியதால், பொறுப்பு விளையாட்டை விட அதிகமாகி விட்டது.இஸ்ரேல் இந்த பகுதியை “பாதுகாப்புப் பகுதி” என அறிவித்தாலும், அந்த வார்த்தை முகாமில் வாழும் குழந்தைகளுக்கு உண்மையில் பொருள் தருவதில்லை. வெடிகுண்டுகள் விழாதபோதும், பசி, தாகம், நோய் என்ற மூன்று பயங்கர ஆயுதங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் தினமும் தின்று விடுகின்றன.முகாமில் காலை உதயமானதும், பல பெண்களும் சிறுமிகளும் நீண்ட வரிசையில் நிற்பார்கள். சூரியன் மேலேறிக் கொண்டே இருக்கும் போது, அவர்களின் நிழல்கள் சுருங்கிக் கொண்டே இருக்கும். வரிசை நகரும் வேகத்தை விட, சூரியன் வேகமாக நகரும். இறுதியில் சில லிட்டர் தண்ணீரை பெற்றுக்கொள்வார்கள்.அந்தத் தண்ணீர், ஒரு குடும்பத்தின் ஒரு நாள் வாழ்வை தாங்கும். ஆனால் மறுநாளும் மீண்டும் அதே கவலை.பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில், வரிசையில் நிற்பதை கற்றுக் கொண்டனர்.விளையாட வேண்டிய வயதில், தண்ணீரை சுமப்பதை கற்றுக் கொண்டனர்.மணலில் விழுந்து போன தண்ணீரைப் போல குழந்தைப் பருவ மகிழ்ச்சிகள் யாவும் அங்கு மறைந்து விட்டது.“போர் யாரின் தவறு? தெரியாது. ஆனால் அதன் விலையை இவர்கள் செலுத்துகிறார்கள்.”ஒன்று மட்டும் நிச்சயம் - அவர்கள் அன்றாடம் சுமப்பது தண்ணீர் அல்ல, கண்ணீர்.- எல். முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி