UPDATED : ஆக 14, 2025 09:44 PM | ADDED : ஆக 14, 2025 09:29 PM
1947 — நாட்டின் சுதந்திரம் என்பது இனிமையாக அமைந்திருக்கவேண்டும் ஆனால் தேசப்பிரிவினை அப்படி அமையவிடவில்லை.இந்திய துணைக்கண்டத்தின் கசப்பான, இரத்தம் கலந்த அத்தியாயமது.அந்தப் பிரிவினை, வெறும் நிலப் பிரிவல்ல — அது கோடிக்கணக்கான இதயங்களின் பிரிவாகும்.இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானுக்கு சென்றவர்களாலும், அங்கு இருந்து இந்தியா வந்தவர்களாலும் ரயில்கள் நிரம்பி வழிந்தன.ரயில்கள் அல்லாமல் நடந்தும்,மாட்டு வண்டியிலும் கூட மக்கள் வந்தனர் அதே போல சென்றனர்.எந்தவித எதிர்கால திட்டமின்றி கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு, பிறந்த மண்ணை, வாழ்ந்த வீட்டை பிரிந்து வலியுடன் சென்றனர்.சுட்டெரிக்கும் வெயிலிலும்,கொட்டும் மழையிலும் நீண்ட துாரம் நடந்தே எல்லையைக் கடந்தனர் போகும் வழியில் உள்ள கிராம மக்களும் உடன் சேர்ந்து கொள்ள பிரிவினை ஊர்வலம் என்பது பத்து மைல் துாரத்திற்கு மேல் நீண்டு காணப்பட்டது.நடக்கும் வலி கடந்து துாரம் நெஞ்சில் சுமந்த துயரம் பசி தாகம் எல்லாம் சேர எல்லாம் இவர்களால்தான் என்று இரு சாரரும் மோதிக்கொண்டதில் புதிதாக ரத்த ஆறு ஒடியது.உயிராய் உறவாய் இருந்தவர்கள் எல்லாம் ஒரே இரவில் பகையாய் மாறிப்போனதில் வன்முறை வெடித்தது வீடுகள் சூறையாடப்பட்டது வீடுகளுடன் கூடிய பலரது கனவுகளும் சேர்ந்தே சூறையாடப்பட்டது.பெண்கள்,குழந்தைகள், பெரியவர்கள் பலர் ஆயிரக்கணக்கில் பலியாயினர், கிராமங்கள் வெறிச்சோடியது யார் எப்போது வெட்டுவர் குத்துவர் என்பது தெரியாத பயத்துடனும்,பயங்கரத்துடனும் எல்லைகள் பிரிக்கப்பட்டன.எங்கும் அழுகுரல்களும்,அலறல்களும்தான் ஆனால் யார் கேதுக்கும் எட்டவில்லை.இதன் காரணமாக இரு தரப்பிலும் இறந்தவர்கள் பத்து லட்சத்திற்கு மேல் என்பது ஆழமாகப் பதிந்து போன துயரம்.தேசப்பிரிவினை நினைவு கூர்வது என்பது, வெறும் கடந்தகாலத்தை புரட்டிப் பார்ப்பது அல்ல — அது மனித நேயத்தின் மதிப்பை மீண்டும் உணர்த்துவது. மதம், மொழி, வரலாறு எதுவாக இருந்தாலும், மனித மனங்கள் ஒற்றுமையிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கிறது.இன்று நாம் அனுபவிக்கும் அமைதியும் நிம்மதியும் அன்றைய வலி நிறைந்த பாடத்தின் பரிசாகும்.வரையறுக்கமுடியாத எல்லை என்பது மனித நேயம் மட்டுமே என்பதை உணர்த்திய தருணங்கள் அவை.பிரிவினையின் கொடூரத்தால் உயிர்நீத்தவர்களுக்கும்,இடப்பெயர்வால் தீராத வலியை அனுபவித்த ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு இந்நாள் சமர்ப்பணமாகும்.வரக்கூடிய தலைமுறை அநத துயரத்தின் வடுக்களை தெரிந்து கொண்டால் அனுபவிக்கும் சுதந்திரத்தை ஆழமாக நேசிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு சென்னை கவர்னர் மாளிகையில் இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை இன்று கவர்னர் ரவி திறந்துவைத்தார்,நாளை வரை நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.படங்கள் ஏற்பாடு:காளீஸ்வரன்-எல்.முருகராஜ்