32 ஆயிரம் கிலோ உருளை ஒரே நாளில் விற்ற விவசாயி
சீனாவில் கிங்காய் மாகாணத்தை சேர்ந்தவர் விவசாயி 'மா', 60. அவர் விளைவித்த, 32 ஆயிரம் கிலோ உருளைக்கிழங்குகளுடன், 4 ஆயிரம் கி.மீ., தொலைவில் உள்ள ஷென்ஜென் நகர சந்தைக்கு சென்றார். அவரது உருளைக்கிழங்குகள் சிறியதாக இருப்பதாக கூறி, வணிகர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இதனால், துவண்டு போனார் விவசாயி மா. கடின உழைப்பு, நீண்ட போக்குவரத்து, பொருளாதார செலவு எல்லாமுமே, வீணாகி விடுமோ என்று அஞ்சினார். அங்கேயே, சாலை ஓரத்தில் உருளைக்கிழங்குகளை இறக்கி, நேரடியாக விற்பனை செய்தார். எனினும் குறைவாகவே விற்பனை ஆனது. அவருடைய இக்கட்டான நிலையை கண்ட உள்ளூர் நபர் ஒருவர், சமூக வலைத்தளங்களில், புகைப்படத்துடன் செய்தியை பகிர்ந்தார். செய்தித்தாள்களும், அவரின் நிலையை கட்டுரையாக வெளியிட்டன. மறுநாளே, உள்ளூர் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து, உருளைக்கிழங்குகளை வாங்கிச் சென்றனர். 32 ஆயிரம் கிலோ உருளைக்கிழங்கும் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தது. இதில் மகிழ்ந்த விவசாயி மா கூறுகையில், “உருளைக்கிழங்கை எப்படி மீண்டும் எடுத்துச்செல்வது, என் குடும்பத்தாரிடம் என்ன சொல்வது என்றெல்லாம் குழம்பி நின்றேன். ஆனால், ஊர், பெயர் தெரியாத என்னிடம், இந்நகர மக்கள் காட்டிய அன்பு என்னை புல்லரிக்கச் செய்து விட்டது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” என்றார்.