உள்ளூர் செய்திகள்

25 மணி நேர நாள்

பரதன் மும்முரமாக ஏதோ எழுதிக்கொண்டிருந்தான். தாத்தாவுக்கு போரடித்தது. “கொஞ்ச நேரம் விளையாடலாம், வாடா!” என்றார். “வேலை இருக்கு தாத்தா” என்றான் பரதன். “ஹோம் வொர்க் முடிக்கணும்!” “இருவத்தஞ்சு மணி நேரமும் ஹோம்வொர்க்கா?” சலித்துக் கொண்டார் தாத்தா. “தாத்தா, மாத்திச் சொல்லிட்டீங்க. ஒரு நாளைக்கு இருவத்து நாலு மணிநேரம்தானே!”“இப்போதைக்கு இருவத்து நாலு மணிநேரம்தான்!” குறும்பாகச் சொன்னார் தாத்தா. “நாளைலேர்ந்து இருவத்தஞ்சு மணி நேரம் ஆகிடுமா?” கேலியாகக் கேட்டான் பரதன். “இன்னும் பல வருஷம் கழிச்சு, ஒரு நாளைக்கு இருவத்தஞ்சு மணி நேரம் இருக்கும், சைன்ஸ்ஃபிக் ஷன் இல்லை, நிஜமாவே!” பரதன், தாத்தாவின் அருகே வந்தான். “கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க தாத்தா!” “இருவத்துநாலு மணிநேரக் கணக்கு எப்படி வந்தது?”“பூமி தன்னைத்தானே ஒரு முறை சுத்த இருவத்து நாலு மணிநேரம் ஆகுது, அதைத்தான் நாம ஒருநாள்னு சொல்றோம்” என்றான் பரதன். “உண்மையில, பூமி ஒரு முறை சுத்திக்க இருவத்து நாலு மணிநேரம், சில மில்லி விநாடிகள் ஆகும்” என்று நிறுத்தினார் தாத்தா. “மில்லி விநாடிகள்னா?” “ஒரு விநாடியை ஆயிரமாப் பிரிச்சா, அதுல ஒரு பங்கு மில்லி விநாடி. இப்போ சொல்லு, ஒரு நாளைக்கு எத்தனை மில்லிவிநாடி?” கேட்டார் தாத்தா. பரதன் பென்சிலை எடுத்தான். “ஒரு நாளைக்கு 24 மணி நேரம். 24 x 60=1440 நிமிஷம். ஒரு நிமிஷத்துக்கு 60 விநாடி. அப்போ, 1440 x 60=86400 விநாடி, ஒரு விநாடிக்கு 1000 மில்லி விநாடின்னா ஒரு நாளைக்கு 86400 x 1000 = 86400000 மில்லி விநாடி!” என்றான். அவனைத் தட்டிக்கொடுத்தார் தாத்தா. “ஒரு நாளைக்கு எட்டரைக் கோடி மில்லி விநாடிக்கு மேல இருக்கு. ஆனா, நீ கணக்குப் போட்டுச் சொன்னதைவிட சில மில்லி விநாடிகள் கூடுதலா இருக்காம்.” “நிஜமாவா தாத்தா? “ஆமாடா, அமெரிக்காவிலே நேரத்தைக் கணக்கிடற National Institute of Standards and Technologyங்கற அமைப்புதான் இப்படிச் சொல்லி இருக்கு” என்றார் தாத்தா. “நூறு வருஷத்துக்கு ஒரு தடவை, ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தோட 2 மில்லி விநாடிகள் சேருதாம்!” “ரெண்டு மில்லி விநாடிதானே தாத்தா? எட்டரைக் கோடியில ரெண்டு சேர்த்தா யாருக்குத் தெரியும்? அது ஒரு பெரிய விஷயமா?” “இப்போ பெரிய விஷயமில்லை. ஆனா, இருபதுகோடி வருஷம் கழிச்சு, இந்த ரெண்டு மில்லி விநாடி எல்லாம் சேர்ந்து, ஒரு மணி நேரம் ஆகிடும். அப்படீன்னா...” “ஒரு நாளைக்கு இருவத்தஞ்சு மணி நேரம் இருக்கும்!” என்று கூவினான் பரதன். “பிரமாதம் தாத்தா!” “என்ன பிரமாதம்? அப்பவும் உன்னை மாதிரிப் பசங்க எந்நேரமும் ஹோம்வொர்க்தான் செஞ்சுக்கிட்டு இருப்பாங்க!” “கோவிச்சுக்காதீங்க தாத்தா, என் வேலை முடிஞ்சது, வாங்க விளையாடலாம்!” “எவ்ளோ நேரம்?” “ரெண்டு மில்லி விநாடி” என்றான் பரதன். இருவரும் கலகலவென்று சிரித்தார்கள்.- என்.சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !