வேடிக்கை மனிதரைப்போல் வீழாதவர்
சுப்பிரமணிய பாரதியார்11.12.1882 - 11.9.1921 எட்டயபுரம், தூத்துக்குடி.'அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே' என்ற வரிகளைக் கேட்கும்போதும், பாடும்போதும் மனதுக்குள் நம்மை அறியாமல் ஒரு சக்தி பிறக்கும். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப்போர் கவிதைகள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். தமிழை நேசிப்பவர்கள் இவரை நேசிப்பார்கள்; புதுமையை விரும்புகிறவர்கள் இவரை விரும்பாமல் இருக்க மாட்டார்கள்; அவர்தான் காலம் கடந்து வாழும் புரட்சிக் கவிஞன் பாரதி.பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன். சுப்பையா என்பது இவரது செல்லப் பெயர். பள்ளியில் படிக்கும்போதிருந்தே கவிதைகள் எழுதத் தொடங்கி, இளம் வயதிலேயே தமிழ்ப் புலமையுடன் திகழ்ந்தார். பதினொரு வயதில் கவிபாடுவது கண்ட எட்டயபுரம் மன்னர் இவருக்கு 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார். அதன் பிறகே 'சுப்பிரமணிய பாரதி' என்று அழைக்கப்பட்டார்.கவிஞர் மட்டுமல்ல; எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என்று பலமுகங்கள் இவருக்கு! தமிழ் மட்டுமன்றி சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு போன்ற பிறமொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார்.பாரதியின் பாடல்கள் சுதந்திரப் போரில் மக்கள் அனைவரையும் ஈடுபட வைத்தது. 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்' என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தைப் பாடல்களால் வெளிபடுத்தி 'தேசியக்கவி' ஆனார். 'இந்தியா' பத்திரிகை மூலமாக விடுதலை உணர்வைத் தூண்டும் வகையில் பல கட்டுரைகளை எழுதினார். இவரது எழுத்துக்கு ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி 'இந்தியா' பத்திரிகைக்குத் தடை விதித்து, கைது செய்து சிறையில் அடைத்தது. வ.உ.சி. உடன் நெருங்கிய நட்பில் இருந்தார். விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதாவை சந்தித்து அவரைத் தனது ஞான குருவாக ஏற்றுக் கொண்டார். 'காலம்னிஸ்ட்' எனப்படும் பத்தி எழுத்துகளையும், அரசியல் கார்ட்டூன்களையும் முதன்முதலாகத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியது பாரதியே. தமிழையும், தமிழ்நாட்டின் சிறப்பையும் பற்றிப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதற்காக பாரதி எழுதி அனுப்பிய கவிதைதான், 'செந்தமிழ் நாடெனும் போதினிலே'. 1912ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழி பெயர்த்தார். கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி போன்ற புகழ் பெற்ற காவியங்களை எழுதினார். மனித நேயம், பெண்கள் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, சமத்துவம், விடுதலை போன்றவற்றைத் தன் வாழ்க்கையின் கனவுகளாகக் கொண்ட பாரதி, பிற மனிதர்களைப் போல் வீழாமல் தமிழ் இருக்கும்வரை நம்முடன் இருப்பார்.