யாப்புக்கு வழிகாட்டும் நூல்
பல்லாயிரமாண்டுப் பழமைமிக்க தமிழ்மொழிக்குச் செம்மையான இலக்கணம் இருக்கிறது. தமிழின் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியம் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழுத்து, சொல், பொருள் என்றமைந்த அந்நூலில், செய்யுள் இயற்றுவது பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.புதிதாகத் தோன்றும் ஒரு சொல்லை நினைவில் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ளவும் பரப்பவும் வேண்டுமெனில், அது இசையோடு இருக்க வேண்டும். ஒவ்வொரு சொற்றொடரும் இசை ஒழுங்கோடு அமைந்தால், கேட்பவர் மறக்காமல் அதை நினைவில் வைத்துக்கொள்வர். தொன்மொழிகள் பலவும் பாடல்களாகத் தோன்றி பேச்சில் நிலைத்தவை. அதனால்தான் நம்மிடையே தோன்றிய பழமையான எழுத்துகள் பலவும் செய்யுட்களாகவே இருக்கின்றன. அவை நினைவில் நிறுத்திப் பாடப்பட்டன. ஒன்றைப் பாடலாகப் பாடியவுடன் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். செய்யுளை எப்படி எழுத வேண்டும்? அவற்றின் அடிகள் எவ்வாறு அமைய வேண்டும்? எத்தகைய அசை அளவில் சொற்கள் இருக்க வேண்டும்? என அனைத்தையும் வரையறுத்துச் செய்த இலக்கணம்தான் யாப்பிலக்கணம். யாப்பு என்பது, செய்யுளைக் குறிக்கும்.தொல்காப்பியத்திற்குப் பிறகு யாப்பிலக்கணத்தை விரிவாகக் கூறிய இலக்கண நூல்கள் யாப்பருங்கலமும் யாப்பருங்கலக்காரிகையும். யாப்பருங்கலத்தின் உரையாக அமைந்த நூல், யாப்பருங்கலக்காரிகை என்பர். அந்நூல் கட்டளைக் கலித்துறை என்னும் செய்யுள் வகையால் ஆனது. அமிதசாகரர் என்பவரே காரிகையை இயற்றியவர்.இன்று நாம் பயன்படுத்தும் செய்யுள் இலக்கணம், (வெண்பா, ஆசிரியப்பா முதலியன) யாப்பருங்கலக்காரிகையைப் பின்பற்றி அமைந்ததாகும். - மகுடேசுவரன்