உள்ளூர் செய்திகள்

காடுகளை நேசிப்பவர்!

'சிவனிபள்ளியின் கருஞ்சிறுத்தை!'பெயரைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்கிறதில்லையா? கென்னத் ஆன்டர்சன் என்பவர் புகழ்பெற்ற வேட்டைக்காரர், எழுத்தாளர். அவருடைய 'தி பிளாக் பாந்த்தர் ஆஃப் சிவனிபள்ளி'யின் (The Black Panther of Sivanipalli) தமிழ் மொழிபெயர்ப்புக்குத்தான் இப்படித் தலைப்பிட்டிருந்தார்கள். இளம்வயதில் இந்தப் புத்தகத்தை ஆர்வத்துடன் படித்த ஒருவர், காடுகளின் காதலராகிவிட்டார்!அவர் பெயர் ச. முகமது அலி. தமிழகத்தின் கானுயிர் எழுத்தாளர்களில் ஒருவர். 'காட்டுயிர்' என்னும் மாத இதழை நடத்தி வருபவர். 'பல்லுயிரியம்', 'அதோ அந்தப் பறவைபோல', 'வட்டமிடும் கழுகு' உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளவர். இப்படிக் காடுகளோடு இயைந்த ஒரு வாழ்க்கையை அவர் அமைத்துக்கொள்ளக் காரணம், காடுகளைப் பற்றிய சில புத்தகங்கள்தான் என்கிறார்.முகமது அலி காடுகளின் மத்தியில் பிறந்தவர். மேட்டுப்பாளையம்தான் அவருடைய சொந்த ஊர். சிறுவயதிலிருந்தே காடுகளை ஓரக்கண்ணால் பார்த்தபடி வளர்ந்தவர். அவரைக் காட்டுக்குள் நுழையச் சொன்னவை இந்தப் புத்தகங்கள்.கென்னத் ஆன்டர்சனைத் தொடர்ந்து, ஜிம் கார்ப்பெட்டின் புத்தகமொன்றைப் படித்தார் முகமது அலி. இந்நூல்களில் இடம்பெற்றிருந்த காட்சிகள் அவரைத் திகைக்க வைத்தன. சுண்டியிழுத்தன. அந்தக் காட்சிகளை உண்மையில் காண்பதற்காகவும் உணர்வதற்காகவும் காட்டுக்குள் செல்லத் தொடங்கினார்.முகமது அலியும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் செல்வார்கள். 'தெரியாத, அறியாத இடம் அத்தனைக்கும் போவோம். அங்கு நடந்தது எதையும் வீட்டுக்குச் சொல்ல மாட்டோம்' என்று பின்னர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர்.இந்த நேரத்தில், ரூவார்க் எழுதிய 'தாத்தாவும் பேரனும்' என்ற கதையை வாசித்தார் முகமது அலி. அதுவும் காடுகளைப் பற்றிய நேயத்தை அவருக்குள் உண்டாக்கியது.இப்படிப் பல நூல்களும் நேரடி அனுபவமும் தந்த மகிழ்ச்சியால் காடுகளுக்கு அடிக்கடி செல்லத்தொடங்கினார் முகமது அலி. பிறரையும் காடுகளுக்குச் செல்லும்படி ஊக்குவிக்கத் தொடங்கினார்.'பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்களை மாதந்தோறும் காடுகளுக்கு அழைத்துச் செல்கிறேன்' என்கிறார் முகமது அலி. 'வீட்டுக்குள் அடைபட்டுக்கிடந்த அவர்களின் சிந்தனைக்கு, காடுகள் சிறகு முளைக்கவைத்துத் தூண்டிவிடுகின்றன.'அதேசமயம், இப்படிக் காடுகளுக்குச் செல்கிறவர்கள், அங்குள்ள விலங்குகளைத் தொல்லைப்படுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கிறார் முகமது அலி. மக்கள் இயற்கையை முழுமையாகப் படித்தால், காட்டைப் பாதுகாத்தால் விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழும், மனிதனுக்கும் பலப்பல நன்மைகள் உண்டு என்று உறுதியாகச் சொல்கிறார்.அன்று காடுகளைப்பற்றிய நூல்களை வாசித்துக் காட்டுக்குள் நுழைந்த முகமது அலி, இன்று தன்னுடைய நூல்களின் மூலம் காட்டுயிர்களைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குகிறார், இன்னும் பலரைக் காடுகளுக்குள் அழைத்துச்செல்கிறார்!-என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !