வெங்கியைக் கேளுங்கள்! - மாணவர்களுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன்
பூமியின் புவி ஈர்ப்பு விசை குறையும் வாய்ப்பு இருக்கிறதா? அப்படிக் குறைந்தால் பூமியின் நிலை என்ன ஆகும்? - எஸ்.ஆர். ரமணன், செம்பட்டி.எல்லாப் பொருட்களுக்கும், அவற்றின் நிறைக்கு (மாஸ் - Mass ) ஏற்ப, ஈர்ப்பு விசை உண்டு. நிறையும், எடையும் ஒன்றல்ல. ஒரு பொருளின் நிறை பூமி, நிலா என எல்லா இடங்களிலும் ஒன்றுதான். மாற்றம் இருக்காது. எடையோ, இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறக் கூடியது. ஒரு பொருளின் எடை, பூமியில் இருப்பதைவிட நிலவில் ஆறில் ஒரு பங்காகக் குறைந்துவிடும். ஒரு பொருளில் எவ்வளவு நிறை உள்ளதோ அதைப் பொருத்து அதன் ஈர்ப்பு விசையும் அதிகரிக்கும். அந்தப் பொருள் தொலைவில் செல்லச் செல்ல ஈர்ப்பு விசை குறையும். சராசரியாக, நொடிக்கு 9.8 மீட்டர் என்ற முடுக்க வேகத்தில் (ஆக்ஸிலரேஷன் - Acceleration) தரை மீது நிற்கும் நம்மை, பூமி பிடித்து இழுக்கிறது. பூமியின் மையத்திலிருந்து விலகிச் செல்லச் செல்ல, புவியீர்ப்பு விசை குறைகிறது. கடல் மட்டத்துடன் ஒப்பிடும்போது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் நமது எடை 0.28% குறைவாக இருக்கும். அதுவே பூமியின் தரைப் பரப்பிலிருந்து சுமார் 600 கி.மீ. உயரே சென்றால் எடை 90% குறைந்துவிடும். அதாவது, அங்கு 'G' எனும் ஈர்ப்பு விசையின் மதிப்பு 8.2 m/s2 என்ற அளவில்தான் இருக்கும். நிலநடுக்கோட்டுக்கு (ஈக்வேட்டர் - Equator) அருகே புவியின் ஈர்ப்பு அளவு 9.789 m/s2. துருவப் பகுதிகளில் (போல்ஸ் - Poles) அது 9.832 m/s2. இதனால் நில நடுக்கோட்டுக்கு அருகே நமக்கு உள்ள எடையைவிட, துருவப் பகுதியில் நமது எடை சற்றே கூடுதலாக இருக்கும். நாசாவின் 'கிரேஸ்' (GRACE) செயற்கைக்கோள், பூமியின் மீது உள்ள ஈர்ப்பு விசை மாறுபாட்டை அளவிட்டது. இடத்துக்கு இடம் சுமார் ± 0.0006 m/s2 மாறுபடுகிறது என கிரேஸ் அளவிட்டுள்ளது. இவ்வாறு ஏற்படும் மாறுபாடு, 0.01% தான் என்றாலும் ஜிபிஎஸ் (GPS) (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் - Global Positioning System) போன்ற தொழில்நுட்பங்கள் செயல்பட இது மிக அவசியமானது. பூமியின் நிறை காலம்தோறும் மாறுபடுகிறது. புவி வெப்பமடைதல் காரணமாக 2003 முதல் 2006 வரையிலான காலத்தில், வட துருவ ஆர்டிக் பகுதியில் இருந்த 15000 கோடி டன் (Tonne) பனிக்கட்டிகள் உருகிக் கடலில் கலந்துவிட்டன. இதன் காரணமாக அங்கு உள்ள ஈர்ப்பு விசையில் அளவிடும்படியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயினும், இது போன்ற வேறுபாடுகள் எல்லாம் சேர்ந்து ஆயிரத்தில் ஒரு பங்கு மாற்றம்தான் ஏற்படுத்த முடியும். ஏதாவது ஒரு பெரிய விண்கல் வந்து பூமியின் மீது மோதி, கணிசமான அளவு பூமியின் நிறை உடைந்து சிதறி வெளியேறினால் தவிர, பூமியின் ஈர்ப்பு விசை பெரிய அளவில் குறையாது.பூமியில் இருந்து 100 பேரை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி, அங்கே நிரந்தரமாகத் தங்க வைக்கப் போகிறார்கள் என்று செய்தி படித்தேன். இது சாத்தியம்தானா?- சுந்தரம் முத்தையா, சிலமலை, தேனி.செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேற முடியுமா என்ற சிந்தனை பல ஆண்டுகளாக உள்ளதுதான். விண்வெளிப் பயணம் ஆரம்பித்த பிறகு, இது வெறும் கனவு அல்ல; என்றைக்கோ ஒரு நாள் சாத்தியம் ஆகும் என்னும் கருத்து இருக்கிறது.செவ்வாய் கிரகத்தில் குடியேறுவது இருக்கட்டும், அவ்வளவு தூரம் சென்று சேரவே குறைந்தது 10 மாதங்கள் ஆகும். செவ்வாய்க்கு மனிதன் சென்றுவர வேண்டும் எனில் பல தொழில் நுட்பச் சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். ஐந்து வருடங்களுக்கு முன் 'மார்ஸ்- 500' (Mars -500) என்ற பெயரில் தனிமைப்படுத்தல் சோதனை ஒன்றை ரஷ்யா நடத்தியது. ஆறு பேர் அடங்கிய குழு 'ஐஸலேஷன் சேம்பர்' (Isolation chamber) எனப்படும் தனி அறைக்குள் 500 நாட்கள் வாழ முடியுமா என்பதை ஆய்வதே அந்தச் சோதனை. ஓர் அறைக்குள் நீர், காற்று சுழற்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாவரங்கள், வளர்ப்புப் பிராணிகள் கூட உள்ளே இருந்தன. ஒன்றின் கழிவை உரமாகக் கொண்டு மற்றதை வளர்த்து, இயற்கை போல ஒரு செயற்கை உயிரிச் சூழலை ஏற்படுத்தினார்கள். ஆய்வு முடிவு எதிர்பார்த்தது போல அமையவில்லை. தனிமைச் சூழலில் இருந்தவர்களால் வெறும் 105 நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. இயற்கைச் சுழற்சி குறித்த நமது அறிவு இன்னமும் மழலைப் பருவத்தில்தான் உள்ளது என்பதை இந்தச் சோதனை சுட்டிக் காட்டியது. எனவே, அடுத்த சில ஆண்டுகளிலேயே செவ்வாய்க்கு குடியேறுவது என்பதெல்லாம் சாத்தியமே இல்லை.