உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஎல்லா கோள்களும் பெரிதாக இருந்தும், பூமியில் இருந்து மற்ற கோள்களை வெறும் கண்ணால் பார்க்க முடியவில்லையே ஏன்?செ. சத்யா ஸ்ரீ, 8ம் வகுப்பு, எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் பெண்கள் பள்ளி, கோவை.எதிர் வீட்டில் எரியும் மெழுகுவர்த்தி நமது கண்களுக்கு புலப்பட்டாலும், பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போது நமக்குத் தெரியாது அல்லவா? அதுபோலவே வான் பொருட்கள் பிரகாசமாக இருந்தாலும், அவற்றின் தொலைவு காரணமாக பூமியில் ஒளி மங்கித்தான் தென்படும். 'புலப்பாட்டு பிரகாசக் குறியீடு' என்ற அளவையில் நமக்குப் பூமியில் தென்படும் வான் பொருட்களின் பிரகாசத்தை அளவிடுவார்கள்.மைனஸ் என்றால் கூடுதல் பிரகாசம்; குறியீட்டு எண் தொகை கூடக்கூட பிரகாசம் குறையும். இதன்படி சூரியனது பிரகாசக் குறியீடு மைனஸ் 27; முழு நிலவு மைனஸ் 12; பூமிக்கு வெகு அருகில் உள்ளபோது வீனஸ் எனும் வெள்ளிக் கோள் மைனஸ் 5ல் ஜொலிக்கும். இரவு வானில் பிரகாசமான விண்மீன்கள் சிரியஸ் மற்றும் அகஸ்தியர் விண்மீன்கள் சுமார் மைனஸ் 1ல் ஜொலிக்கும். சுமார் 2.76 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெழுகுவர்த்தி எவ்வளவு பிரகாசத்தில் ஒளிருமோ அதே அளவில் குறியீடு 6க்கு அதிகமான வான் பொருட்கள் ஒளிர்ந்து நம் கண்களுக்குப் புலப்படாது. எட்டாவது கோளான நெப்டியூனின் பிரகாச குறியீடு +7.8 எனவே அது வெறும் கண்களுக்குப் புலப்படாது.விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு, இரவு பகல் உண்டா?கு.தர்ஷினி, 5ம் வகுப்பு, இந்து ஆரம்பப் பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்.சர்வதேச விண்வெளிக்குடிலில் இருக்கும் விண்வெளி வீரர்கள் சுமார் 90 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியைச் சுற்றி வருவார்கள். இதன்படி பார்த்தால் 24 மணிநேரத்தில் விண்வெளிக் குடிலில் இருந்து சுமார் 20 தடவை சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் பார்ப்பார்கள். ஆக, விண்வெளிக் குடிலில் வெறும் 90 நிமிடம்தான் ஒருநாள்!ஆனால், பூமியில் இருந்ததுபோல இயல்பு வாழ்க்கைக்காக, 24 மணிநேரத்துக்கு ஒருமுறை சுமார் 8 மணிநேரம் தலையை முழுவதுமாக மூடிக்கொண்டு விண்வெளி வீரர்கள் சாப்பிட்டு, உறங்கி வேலை செய்வார்கள்.புதிய மரபணு கொண்ட செல்கள் உடலினுள் நுழைந்தால் எதிர்த்துப் போராடும் உடல், புற்றுநோய் செல்களுக்கு எதிராக ஏன் போராடுவதில்லை?கா. கோகுல்குமார், விலங்கியல் 3ம் ஆண்டு, அரசு கலைக் கல்லூரி, கோவை.வைரஸ், நச்சு பாக்டீரியா கிருமி முதலியவை நம்முடைய உடலில் புகுந்து நோயை ஏற்படுத்தும். நமது உடலில் உள்ள T செல்கள் (Thymus cells) B செல்கள் (Bursa-derived cells) போன்ற நோய் எதிர்ப்பு செல்கள் அந்தக் கிருமிகளை இனம்கண்டு அழிக்கும்; இதுதான் நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல். வேலியே பயிரை மேய்வதுபோல, கிருமிகளை அழிக்கும் T மற்றும் B செல்களுக்கு உடலின் செல்களை அழிக்கும் நிலை ஏற்பட்டால் அது வளர்சிதைவு நோயாக மாறிவிடும். தாயின் வாசத்தை குழந்தை அறிந்து கொள்வது போல, நமது செல்கள் வெளிப்படுத்தும் சில புரதங்களை உணர்ந்து இவை, 'நம்முடைய பொருள்' எனவும். கிருமிகள் வெளிப்படுத்தும் வேறு புரதங்களை, 'வேற்றுப் பொருள்' எனவும் நோய் எதிர்ப்பு செல்கள் உணர்ந்து கொள்கின்றன. கேன்சர் செல்களும் நமது உடல் செல்கள்தான்; ஒருசில வேறுபாடுகளைத் தவிர அவைகளும் நமது மரபணுதான். எனவே அந்த செல்களை 'வேற்றுப் பொருள்' எனப் பிரித்து அறிவது கடினம். அவ்வாறு பிரித்து அறியும் முன்பே வேகமாக கேன்சர் செல்கள் பல்கிப் பெருகிவிடுகின்றன. மேலும் கேன்சர் செல்கள் தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பதால் அவற்றை இனம் காண்பது கடினம். எனினும் நோய் எதிர்ப்பு செல்கள் கேன்சர் செல்களை தனித்து இனம் காண்கின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. இதைப் பயன்படுத்தி கேன்சர் நோய்க்கு புதுமையான முறையில் உயிரி தொழில்நுட்ப மருந்துகள் தயாரிக்கும் பணியில் பலர் ஆராய்ந்து வருகின்றனர்.இளநீர், தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது?அ.யாழினி பர்வதம், 7ம் வகுப்பு, தாய் சத்யா மெட்ரிக் பள்ளி, சென்னை.இளநீருக்குள் இருப்பது தண்ணீர் அல்ல! எண்டோஸ்பெர்ம் (Endosperm) எனப்படும் முளை சூழ்தசை செல்கள். எண்ணெய்ச் சத்தும் புரதமும் மாவுச் சத்தும் செறிவாக இருப்பதால், கருத்தரித்தலின் போது பூக்கும் தாவரங்களின் விதைக்குள்ளே உருவாகும் திசுதான் இது. அரிசியின் உள்ளே கிடைக்கும் சூழ்தசை செல்களையே சாதமாக உண்கிறோம், கோதுமையின் சூழ்தசை செல்கள்தான் ரொட்டிமாவு. ஆரம்பத்தில் நீர்ம நிலையில் இருக்கும் இந்த சூழ்தசை செல்கள் தேங்காய் முற்ற முற்ற தடிமனாகி வெள்ளை வெளேர் என தேங்காயாக மாறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !