உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஉலக வரைபடத்தின் எல்லைகள் யாரால் வரையறுக்கப்படுகின்றன?ஆர். திருநாவுக்கரசு, 10ம் வகுப்பு, விக்டோரியா மெட்ரிக் பள்ளி,காஞ்சிபுரம்.உலக நாடுகளின் இடையே உள்ள எல்லைகள், அந்தந்த நாட்டின் அரசுகளால் அவ்வப்போது வரையறுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சூடான் நாட்டின் பகுதியாக இருந்த தெற்கு சூடான் பகுதி, கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 9ம் நாளன்று, புதிய நாடாக மலர்ந்தது. 1917ம் ஆண்டு முதல், சோவியத் ஒன்றியமாக இருந்த பகுதிகள், 1991ம் ஆண்டு, அர்மேனியா, உக்ரைன் போன்ற பல நாடுகளாகப் பிரிந்தன. இங்கிலாந்தில் இருந்து பிரிந்து தனிநாடாக வேண்டும் என, ஸ்காட்லாந்து பகுதியில் வாக்கெடுப்பு நடந்தது. ஆனால், அந்தப் பிரிவு மயிரிழையில் தடுக்கப்பட்டது. இல்லை என்றால், இங்கிலாந்தும் பிரிந்து இரண்டு நாடுகளாக ஆகியிருக்கும்.பூமியில் கடல் இல்லாமல் முழுவதும் நிலப்பகுதியே இருந்தால், என்ன விளைவுகள் ஏற்படும்?வேத.சண்முகம், புதுச்சேரி. கடல் இல்லை என்றால், உயிர் தோன்றி, அதிலிருந்து படிநிலை வளர்ச்சி அடைந்து, அறிவு படைத்த உயிரினம் உருவாகி இருக்குமா என்பதே கேள்விக்குறிதான். உயிரற்ற பொருளில் இருந்து உயிர்ப் பொருட்கள் தோன்ற, கடல் அவசியம் என பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடலே இல்லாத கோளில் உயிர்கள் தோன்ற முடியாது என்பது, அறிவியலாளர்களின் கருத்து. கடலின் நீரோட்டம்தான் பூமியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் ஏற்படும் கூடுதல் வெப்பத்தை, துருவப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது. கடல் இல்லை என்றால், துருவப் பகுதிகள் மேலும் குளிரடைந்து, அடர்ந்த பனிப்போர்வையாக இருக்கும். நிலநடுக்கோட்டுப் பகுதி, சுட்டெரிக்கும் வெப்பத்தில் தீப்பிடித்தது போல இருக்கும். கடலே இல்லாத நிலையில், மழைப்பொழிவு பெருமளவு பாதிக்கப்படும். நீர் சுழற்சி இல்லையென்றால், நீரை மீண்டும் உபயோகப்படுத்த முடியாமல் பூமி வறண்டு போய்விடும்.நம் நாட்டில் தென்மேற்குப் பருவக்காற்றைவிட, வடகிழக்குப் பருவக்காற்றில் குறைவாக மழை பொழிகிறது அது ஏன்?ஜே. ஜமால் முகைதீன், 10ம் வகுப்பு, மஹ்தூமியா மேல்நிலைப் பள்ளி, கீழக்கரை.தென்மேற்குப் பருவக்காற்றானது, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் என, இரு கடல்களின் மீது படர்ந்து வந்து, இந்தியா மீது வீசுகிறது. கடலின் மீது பாய்ந்து வருவதால், கூடுதல் நீராவியை இந்தப் பருவக்காற்று கொண்டுவரும். வடகிழக்குப் பருவக்காற்று, வங்காள விரிகுடா மீது மட்டும் பாய்ந்து வீசுகிறது. எனவே, குறைவான நீராவியையே கொண்டுள்ளது. இக்காற்று, தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் மழையை பொழியச் செய்கிறது.இந்தியாவில் ஆண்டுதோறும் பொழியும் மழையில் 70 சதவீத மழை, ஜூன் முதல் செப்டம்பர் வரை நீளும் தென்மேற்குப் பருவக் காற்றின்போது, பொழிகிறது. இந்தக் காலத்தில், சுமார் 89 செ.மீ. மழைப் பொழிவு இருக்கும். லடாக் போன்ற ஒருசில பகுதிகள் தவிர, நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்த மழைப் பொழிவு இருக்கும். ஆனால் வடகிழக்குப் பருவ மழை, கோரமண்டல் கடலோரப் பகுதியான ஆந்திரத்தின் சில பகுதிகள், தமிழகம், தென் கேரளம் ஆகிய பகுதிகளில் மட்டுமே பெய்யும். நாட்டின் மொத்த மழையில் வெறும் 10 சதவீதம் மட்டும் இந்த மழையால் ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் 48 சதவீத மழை வடகிழக்குப் பருவத்தில்தான் பொழிகிறது.சோழமண்டலக் கடற்கரைதான், போர்த்துக்கீசியர்களால் கோரமண்டல் என அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காவிரி ஆற்றங்கரைப் பகுதியான கோடியக்கரையில் இருந்து, ஆந்திரத்தில் உள்ள கிருஷ்ணா நதி வரையிலான கடற்கரைப் பகுதி, கோரமண்டலக் கடற்கரையாகும்.புயல் வருவதைக் குறிக்க, கடலோரத்தில் ஏற்றப்படும் எச்சரிக்கைக் கூண்டுகளுக்கு என்ன அர்த்தம். அது எதனுடைய தீவிரத்தைக் குறிக்கும்?வி. சாந்தகோபாலன், மதுரை.துறைமுகங்களின் கொடிமரத்தில் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டு, பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். 1ம் எண்ணிலிருந்து 11ம் எண் வரை எச்சரிக்கைக் கூண்டுகள் உள்ளன. புயலின் தீவிரம், எந்தத் திசையில் கடக்கும் என்பன குறித்து, அந்தந்தத் துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் எச்சரிக்கை கூண்டைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். 1ம் எண்: புயல் உருவாகக்கூடிய வானிலை ஏற்பட்டு, ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், வரும் நாட்களில் எச்சரிக்கையாகச் செயல்பட இந்த எச்சரிக்கை.2ம் எண்: துறைமுகத்துக்கு அருகே புயல் உருவாகியுள்ளது.3ம் எண்: திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலை ஏற்படலாம்.4ம் எண்: துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ஆளாகலாம். 5ம் எண்: துறைமுகத்தின் இடப்பக்கமாக, புயல் கரையைக் கடக்கும்.6ம் எண்: துறைமுகத்தின் வலப்பக்கமாக, புயல் கரையைக் கடக்கும். 7ம் எண்: கடுமையான புயல் துறைமுகப் பகுதியைத் தாக்கும்.8ம் எண்: தீவிர புயல் துறைமுகத்தின் இடப்பக்கமாகக் கரையைக் கடக்கும். 9ம் எண்: தீவிர புயல் துறைமுகத்தின் வலப்பக்கமாகக் கரையைக் கடக்கும்.10ம் எண்: நேரடியாக துறைமுகம் அருகே தீவிர புயல் கரையை கடக்கப் போகிறது. 11ம் எண்: வானிலை எச்சரிக்கை மையத்துடன் தகவல் தொடர்பற்று, தீவிர புயல் எந்தத் திசையில் செல்லும் என்பது தெரியாத நிலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !