வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிகுரங்கில் இருந்தே மனிதன் வந்தான் என்பது எப்படி நிரூபணமானது?ரா. லீலா ஸ்ரீ, 8ம் வகுப்பு, க்ஷத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.'குரங்கிலிருந்து உருவான மனிதன்' என்பது, பேச்சு வழக்கு என்றாலும், அறிவியல் ரீதியில் தவறு. இன்று நம்முன் உள்ள குரங்குகளும் பரிணாமம் அடைந்தவையே. பூமியில் இருக்கிற எல்லா உயிரினங்களும், பரிணாமம் அடைந்தவைதான். காட்டில் நாம் பார்க்கும் நவீன குரங்கும், நானும், நீங்களும், முன்னொரு காலத்தில் வாழ்ந்த குரங்கு போன்ற ஒரு விலங்கிடமிருந்து பரிணமித்து, படிநிலை வளர்ச்சி பெற்றவர்கள். இந்த விலங்கை மனிதன், -குரங்குக்குப் பொதுவான மூதாதையர் எனக் கூறுவார்கள்.எடுத்துக்காட்டாக, என் மகளுக்கும், என் அண்ணன் மகனுக்கும் என் தாய், தந்தையர் பொது மூதாதையர் ஆவர். என் மகளுக்கும் என் தாயின் சகோதரியின் பேத்திக்கும், என் தாய்வழி பாட்டி பொது மூதாதையர். மனிதனுக்கும் குரங்குக்கும் உள்ள பொது மூதாதையர், இன்றைய குரங்குகள் அல்ல; குரங்கு போன்ற ஓர் உயிரி. அடிமரத்தில் இருந்து கிளைகள் தோன்றுவதுபோல, குரங்கு போன்ற மூதாதை உயிரியில் இருந்துதான் மனிதனாக ஒரு கிளையும், குரங்காக இன்னொரு கிளையுமாகத் தோன்றின.பொது மூதாதையரிடம் இருந்து பரிணமித்த அடுத்த உயிரிகள், உடனே சட்டென்று வேறுபட்டுத் தெரியாது. உள்ளபடியே நமது பிள்ளைகளுக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு. ஆனால், அவை மிகமிக நுணுக்கமானவை; அளவிடவே முடியாது. பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சற்றே வித்தியாசம் தெரியும். அவ்வளவு மெதுவாகத்தான் பரிணாமம் நடைபெறும். மரபணு ஒப்புமை ஆய்வு; உடலியல் அமைப்பு ஒப்புமை ஆய்வு; தொல்லியல் எச்சங்கள் போன்ற தடயங்கள், இந்தப் படிநிலை வளர்ச்சிக்குச் சான்றாகத் திகழ்கின்றன.முதலில் முட்டையில் இருந்து கோழி வந்ததா? அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா?க. காவ்யா, மின்னணுவியல் முதலாண்டு, வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி, கரூர்.பரிணாமத்தின்படி முட்டையே முதலில் வந்தது. கோழி என்ற உயிரினம் வருவதற்கு முன்பே இருந்த டைனோசர்கள் முட்டை இடும். கோழி இனம் பரிணமிப்பதற்கு முன்பே, 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால், முட்டையிடும் உயிரினங்கள் இருந்தன. நவீன கோழி என்ற இனம் முதன்முதலில் பிறக்கும்போது, அது ஏதோ ஒரு முட்டையில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.அதன் முட்டையை இட்டது நவீன கோழி இனத்தின் மூதாதையர் என்றாலும், முட்டை நவீன கோழி முட்டைதான் அல்லவா! எனவே, நவீன படிநிலை வளர்ச்சி பரிணாம தத்துவத்தின்படி, முதலில் வந்தது கோழியா, முட்டையா என்கிற போட்டியில் முட்டையே வெல்கிறது.மலர்கள் மட்டும் எப்படி எல்லா நிறங்களிலும் பூக்கின்றன? வண்ணங்களுக்குக் காரணம் என்ன?சு. ராஜேஸ், 4ம் வகுப்பு, மதர் தெரசா மெட்ரிக் பள்ளி, சிவகங்கை.ஒரு செடியின் மகரந்தத்தை, மற்றொரு மலரில் கொண்டு சேர்க்க நடைபெறும் நிகழ்வு அயல் மகரந்தச் சேர்கை. இதற்காக பூச்சி, பறவைகளைக் கவர்ந்து இழுக்க, மலர்கள் தரும் விளம்பரமே மலரின் நிறம். சிவப்பு, நீலம், இளஞ்சிவப்பு, ஊதா முதலிய நிறங்களைத் தரும் நிறமிகளின் வேதிப் பொருட்கள்தான், பெரும்பாலும் மலர்களுக்கு நிறங்களைத் தருகின்றன. தக்காளிப் பூவில் சேகரித்த மகரந்தத்தை, வெண்டைப் பூவில் சேர்த்தால், பலன் இல்லை அல்லவா? எல்லாத் தாவரங்களின் பூக்களும் ஒரே நிறம் என்றால் இப்படி ஆகிப் போகும். தக்காளிப் பூவும், வெண்டைப் பூவும் நிறம், வடிவம், மணத்தில் வேறுபட்டு இருக்கும். இதனால் ஒரு பூவை அண்டிய பூச்சி, அதே தாவர இனத்தின் வேறு ஒரு செடியில் பூத்த பூவை அடைந்து, அந்த மகரந்தத்தைச் சேர்த்து அயல் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும். அதற்காகத்தான் பரிணாம படிநிலை வளர்ச்சியில், பூச்சியும் பூவும் இணைந்து, படிநிலை வளர்ச்சி பெற்றுள்ளன என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.ஒரு பொருளை சிறிதுநேரம் கண் இமைக்காமல் பார்த்தால், ஏன் கண்ணீர் வருகிறது?வி.ஆர்.ஜெயஸ்ரீ, 7ம் வகுப்பு, பெர்க்ஸ் பள்ளி, கோயம்புத்தூர்.கண்ணை உலராமல் வைத்துக் கொள்ளவும், சுத்தம் செய்யவும் நடைபெறும் ஓர் உடலியல் நிகழ்வுதான் இது. சராசரியாக நிமிடத்துக்கு 15-20 முறை நாம் கண்ணை இமைக்கிறோம். காரின் முன்புறத்தில் இருக்கும் துடைப்பான் (WIper- - வைப்பர்) கண்ணாடியைத் தேய்த்துச் சுத்தம் செய்யும். அதுபோல, கண் இமைத்தல் என்பது, கண்ணின் மேற்புறத்தை சிறிதளவு கண்ணீரால் தேய்த்து உலர்ந்துவிடாமல் ஈரப்பதத்துடன் வைக்கிறது. ஏதாவது ஒன்றை, கண் இமைக்காமல் வெறித்துப் பார்த்துகொண்டு இருந்தால், கண்ணில் நீர் படர்வது இல்லை. கண் தனக்கு வேண்டிய சுத்திகரிப்பு நிகழவில்லை என்று மூளைக்குத் தெரிவிக்கும். அதன்பிறகு மூளை, கண்ணீர்ச் சுரப்பிகளை (லாக்ரிமல் க்ளாண்ட்ஸ் -- Lacrimal glands) தூண்டிவிட்டு கண்ணீரைச் சுரக்கும்.