மக்களாட்சியின் மணிமகுடம்!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டு இருக்கிறது. உள்ளாட்சி என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இளையோர்களாகிய நீங்கள் அறிந்துகொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.அமைப்புகள், நிர்வாகம், அதிகாரம் என்பதெல்லாம் எங்கோ வெளியில் இல்லை. அவையெல்லாம், மக்களாகிய நாம் தான், நமக்காக உருவாக்கியுள்ளோம். குறிப்பாக, உள்ளூர் மட்டத்திலேயே பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உருவாக்கப்பட்டவையே உள்ளாட்சி அமைப்புகள். சோழர் காலத்தில் இருந்தே இத்தகைய அமைப்புகள் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் கொஞ்சம் தூரத்தில் இருப்பவர்கள். ஆனால், உள்ளாட்சி மன்றமும் அதன் உறுப்பினர்களும் நமக்கு அருகிலேயே இருப்பவர்கள். நம் பகுதியில் உள்ள குறைகளை எல்லாம், இவர்கள் மூலமாகவே நாம் சீர்படுத்திக்கொள்ள முடியும்.சரியாகச் சொல்லவேண்டுமென்றால், நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் சரியாக இயங்கவேண்டும் என்றால், உள்ளாட்சிகள் சிறப்பாக இயங்க வேண்டும். பொறுப்பும் அதிகாரமும் பரவலாக இருக்கும்போதுதான், மக்களுடைய தேவைகளும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். ஜனநாயகம் தழைக்கவும் இதுவே ஆரம்பப்புள்ளி.உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரங்களைக் கொண்டே சாதனை செய்யமுடியும் என்று பலர் நிரூபித்துள்ளனர். அவர்கள் தங்கள் பகுதிகளில் கொண்டுவந்துள்ள மாற்றங்கள், மிக எளியவை தான். ஆனால், அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வியப்பளிப்பவை. இவர்களில் ஒரு சிலரை இந்த இதழில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.'மக்களாட்சியின் மணிமகுடம்' உள்ளாட்சி அமைப்புகள் தான். அவை எப்படி இயங்குகின்றன என்பதைத் தெரிந்து கொள்வோமா?