உள்ளூர் செய்திகள்

வங்கத்தின் நண்பர்

ஷேக் முஜிபுர் ரஹ்மான்: 17.3.1920 - 24.1.1975'தாய்மொழியில் பேசக்கூடாது; வேறுமொழியில்தான் பேசவேண்டும்' என்று யாராவது சொன்னால், ஏற்றுக்கொள்ள மாட்டோம்தானே? ஷேக் முஜிபுர் ரஹ்மானும் அப்படித்தான், மொழித் திணிப்பை ஏற்க மறுத்துப் போராடினார்.பிரிட்டிஷ் இந்தியாவின் கிழக்கு வங்கப் பகுதியில் இருந்த, டோங்கிபுரா கிராமத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே உதவும் குணமும், தலைமைப் பண்பும் இருந்தது என்பதற்குச் சான்றாக, பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தானியங்கள் வழங்கி உதவினார். படிப்பில் சிறந்து விளங்கவில்லை. விளையாட்டில் விருப்பம் கொண்டவராக இருந்தார். 1940ல், முஸ்லிம் மாணவர் அமைப்பில் சேர்ந்து, மாணவர் தலைவர் ஆனார். பிறகு, 1943ல் வங்காள முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1946ல் இஸ்லாமியா கல்லூரி மாணவர் சங்கப் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பகுதி மாணவர் அமைப்பின் முக்கிய அரசியல் தலைவராக உயர்ந்தார்.இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருக்க விரும்பினார். கிழக்கு பாகிஸ்தானில் (கிழக்கு வங்கம்) அதிகமானோர் பேசும் மொழியாக, வங்க மொழி (பெங்காலி) இருந்தது. 1949ல் முகம்மது அலி ஜின்னா, 'உருது மொழியை தேசிய மொழியாக அனைவரும் ஏற்க வேண்டும்' என்று அறிவித்தார். மாணவர் தலைவராக இருந்த முஜிபுர் ரஹ்மான், அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ததால், கைது செய்யப்பட்டார். வங்க மக்களின் அதிகாரப்பூர்வ மொழியாக வங்க மொழியை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.முஸ்லிம் லீக் கட்சியிலிருந்து விலகி, அவாமி லீக் கட்சியில் இணைந்து, 1955ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார். வங்க மக்களின் அரசியல் அதிகாரத்துக்காகவும், கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்காகவும், 1955 முதல் 1958 வரை பாடுபட்டார்.1970ல் நடந்த பொதுத் தேர்தலில், அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. முஜிபுர் ரஹ்மான் பிரதமராவதை விரும்பாத பாகிஸ்தான் ராணுவம், அவாமி லீக் கட்சியைத் தடை செய்தது. இதனால், முக்தி பாஹினி என்ற புரட்சிப் படை, அவருக்கு ஆதரவாக உருவானது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிட்டு, முஜிபுர் ரஹ்மான் வென்றார். 1971ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து, வங்க தேசம் உருவானது. புதிய தேசத்தின் முதல் அதிபராகப் பொறுப்பேற்றார். 1972 முதல் 1975 வரை, அந்த நாட்டின் பிரதமராகவும் இருந்தார். 'வங்க தேசத்தின் தந்தை' எனவும் 'வங்கபந்து' (வங்கத்தின் நண்பர்) எனவும் போற்றப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !