மூளையைச் சுறுசுறுப்பாக்கும் தூள்
சிக்கரி (Chicory)தாவரவியல் பெயர்:'சிக்கோரியம் இன்டிபஸ்'(Cichorium Intybus)அன்றாடம் நாம் பருகும் காப்பியில் சுவையைக் கூட்டவும், காஃபின் (Coffine) என்ற ஆல்கலாய்டின் அளவைக் குறைக்கவும் காப்பிக் கொட்டைத் தூளுடன் சிக்கரித் தூள் கலக்கப்படுகிறது. சிக்கரி (Chicory) ஒரு பல்லாண்டுத் தாவரம். 'அஸ்டரேசியே' (Asteraceae) எனும் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் முள்ளங்கி போன்ற வேர்களைக் காயவைத்து வறுத்து பொடிப்பதன் மூலம் கிடைக்கும் பொடிதான் சிக்கரித் தூள். காப்பிக் கொட்டைத் தூளுடன் சிக்கரித் தூள் 80 க்கு 20 என்ற விகிதத்தில் கலக்கப்படுகிறது. சிக்கரி வளர மணற்பாங்கான நிலமும் 10 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் தேவைப்படும். விதைகள் மூலம் பயிரிடப்படும் இதன் வேர்களும் இலைகளும் 7 முதல் 8 வாரங்களில் அறுவடை செய்யப்படும். சிக்கரிச் செடி 1 முதல் 1.5 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதிகக் கிளைகளற்ற இந்தச் செடியின் தண்டுகள் பச்சை, இளஞ்சிவப்பு நிறங்களில் இருக்கும். மாற்றடுக்கில் இலைகள் உடையது. இலை நீளமான மடிப்புகளும், ஓரங்களில் பற்களும் கொண்டது. காம்புகளற்று தண்டை ஒட்டி இலைகள் இருக்கும். இலைகளின் அடியில் சிறு சிறு முடி போன்ற வளர்ச்சி காணப்படும்.4 முதல் 5 செ.மீ. அகலமுள்ள, 15 முதல் 20 இதழ்கள் கொண்ட வெளிர் நீல மலர்கள் பூக்கும். பூக்கள் அதிகாலையில் மலர்ந்து 5 மணி நேரத்திற்குள் வாடிவிடும்.இதன் இலைகள் வைட்டமின் சி, பி, சத்துகள் நிறைந்தது. இலைகளும் உணவாகப் பயன்படுவதால், இலைகளுக்கு Chichorium intybus var. Foliosum மற்றும் வேர்களுக்கு Chichoriyum intybus var. sativum என தனித்தனியே சிக்கரிச் செடிகள் பயிரிடப்படுகின்றன. வேர்க்கிழங்கில் 10 முதல் 16 சதவீதம் புரதம், லாக்டுசின் (Lactucin), இனுலின், சுக்ரோஸ், செல்லுலோஸ் மற்றும் சாம்பல் சத்துகளும் உள்ளன. சிக்கரி உடல்சூட்டைத் தணித்து மூச்சுத் திணறல், அஜீரணம், தலைவலி ஆகியவற்றை நீக்குகிறது. மூளையைச் சுறுசுறுப்பாக்கும் மருந்தாகவும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் சிக்கரி பயன்படுகிறதுஆஸ்திரேலியா, சீனா, வட அமெரிக்கா போன்ற நாடுகளில் தரிசு நிலங்களில் சிக்கரிச் செடி தானாகவே வளரும். ஐரோப்பாவைச் சேர்ந்த இத்தாவரம், 19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் பயிரிடப்பட்டது. உலகில் பரவலாக தற்போது சிக்கரி பயிரிடப்பட்டாலும் நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனியில் மிக அதிக அளவில் பயிரிடப்படுகிறது.இந்தியாவில் 1950க்குப் பின்னர் சிறிய அளவில் பயிரிடப்பட்டு வந்த சிக்கரியை, நெஸ்லே (Nestle) நிறுவனம், 1970இல் காபியின் சுவையை அதிகரிக்கும் பொருளாக அறிமுகப்படுத்திய பின்னர், குஜராத், தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. தற்போது தரமான சிக்கரி உற்பத்தி செய்யும் சில நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது.- அ.லோகமாதேவி