செங்கல்லை ஒட்ட முடியுமா?
சுவர் கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். செங்கற்களுக்கு இடையில் சிமென்ட் கலவையைப் பூசுவார்கள், இல்லையா? பசை தடவினால் காகிதம் ஒட்டிக்கொள்ளும். தண்ணீர் கலந்து குழைக்கப்பட்ட சிமென்ட், எப்படி செங்கற்களை ஒட்டுகிறது? 'சிமென்ட்' (Cement) என்பது கட்டடங்கள் கட்டப் பயன்படும் முக்கியமான இணைப்புப்பொருள் (பைண்டர் - Binder). தமிழில் 'சீமைக் காரை' என்கிறார்கள். சாம்பல் நிறத்தில் தூள் வடிவத்தில் இருக்கும் சிமென்ட்டை நீருடன் கலக்கும்போது இறுகிக் கடினமாகிறது. சிமென்ட் கலவையை செங்கல், இரும்பு போன்ற பொருள்களுடன் சேர்க்கும்போது அது இறுகிப் பசை போல ஒட்டிக் கொள்கிறது. தண்ணீருடன் கலந்து கிடைக்கும் சிமென்ட் கலவை காயும்போது ஏற்படும் நீரேற்ற வினையால் (ஹைட்ரேஷன் - Hydration) கெட்டிப்படுகிறது. அப்பொழுது அது கால்ஷியம் சிலிகேட் ஹைட்ரேட் (Calcium silicate hydrate) ஆக மாறிவிடுகிறது. சிமென்ட் குழம்பு, செங்கல்லில் உள்ள நுண்ணிய துளைகளில் புகுந்து காயும்போது இறுகுவதால் பிடித்துக் கொள்கிறது. இதன் மூலம் இணைக்கும் தன்மை கிடைக்கிறது. சிமென்ட் எல்லாச் சூழல்களிலும் நீடித்து உழைக்கக் கூடிய கட்டடப் பொருள். நீருக்கு அடியிலும் இது வலு இழக்காமல், கரையாமல் உறுதியாக இருக்கும்.பழங்காலத்தில் எரிமலைச் சாம்பல், சுடப்பட்ட சுண்ணாம்பு, செங்கல் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து சிமென்ட் போலப் பயன்படுத்தினர். தற்போது கால்ஷியம் சிலிகேட், கால்ஷியம் கார்பனேட், கால்ஷியம் அலுமினேட் ஆகியவற்றைப் பொடி செய்து கலந்து சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக, சிமென்ட்டை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, நீரியல் சிமென்ட் (ஹைட்ராலிக் சிமெண்ட் - Hydraulic Cement), நீரியல் அல்லாத சிமென்ட் (நான்-ஹைட்ராலிக் சிமென்ட் - Non-Hydraulic Cement).உயர்ந்த கட்டடங்கள், தொழிற்சாலைகள், மணற்பாங்கான பகுதிகள், கடலுக்குள் கட்ட எனப் பல்வேறு வகையான கட்டுமானப் பணிகளுக்காக பல விதமான சிமென்ட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, அரியலூர், கரூர், சேலம், ராஜபாளையம் போன்ற இடங்களில் சிமென்ட் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. கட்டுமானப் பணியில் முக்கியப் பொருளாகப் பயன்பட்டாலும், சிமென்ட் நமக்கு ஒவ்வாமையை (அலர்ஜி - Allergy) ஏற்படுத்தக் கூடியது. இதைத் தவிர்க்க சிமென்ட்டை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். கையுறை, பாதுகாப்புக் கண்ணாடி, தூசிக் கவசம் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தோல், நுரையீரல், கண்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.