உண்குச்சிகளால் உண்ணலாமா?
உண்குச்சிகள் (-Chopsticks), சீன மொழியில், 'குவைட்சு' என அழைக்கப்படுகிறது. சீனர்கள் இரண்டு குச்சிகளைப் பயன்படுத்தி உண்பார்கள். இந்தப் பழக்கம் கி.மு.500-இல் தொடங்கி, 2,500 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முற்காலத்தில், இறைச்சியை வேகவைக்க சீனர்கள் நெருப்புக் கங்குகளைப் பயன்படுத்தினர். சூடான இறைச்சித் துண்டுகளை இரு குச்சிகளைக் கொண்டு இடுக்கிபோல் பயன்படுத்தி பரிமாறுவார்கள். இந்தப் பழக்கம் பல தலைமுறைகளாகத் தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளில் உண்குச்சிகளின் அளவிலும், மூலப்பொருளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உண்குச்சிகள் மூங்கில், நெகிழி, இரும்பு, வெள்ளி, எஃகு, மரம் போன்ற மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. உண்குச்சிகளால் உண்பவர்கள் சீனர்கள் மட்டுமல்ல. அருகில் உள்ள நேபாளம், திபெத், ஜப்பான், வியட்நாம், கொரியா ஆகிய நாடுகளிலும் உண்குச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாட்டிலும் அளவு, மூலப்பொருட்கள், பயன்படுத்தும் பாணி மாறுபடும். சீனச் சிந்தனையாளர் கன்பூசியஸ் (Confucius) உண்குச்சிகளைப் பிரபலமாக்கினார். இவர் சைவ உணவு விரும்பி. உணவு மேஜையில் கத்திகளைப் பயன்படுத்துவது, வன்முறைச் சிந்தனைகளைத் தூண்டும் என கூறினார். கத்திக்குப் பதில் கூர்மையில்லாத மூங்கில் குச்சிகளைக் பயன்படுத்த அறிவுறுத்தினார். அப்படித்தான் சீனாவில் இந்தக் குச்சிகள் பிரபலமாயின. உண்குச்சிகளைப் பயன்படுத்த, சீனக் குழந்தைகளுக்கு அவர்கள் எழுதப் படிக்கக் கற்கும் முன்பே கற்றுத் தரப்படுகிறது. உண்குச்சியை வலது கையால் பயன்படுத்த வேண்டும், குச்சிகளைக் கடிக்கக்கூடாது, உணவில் குத்தி வைக்கக் கூடாது, உண்ணும்போது, குச்சிகளை எதிரில் இருப்பவரை நோக்கிக் காட்டி பேசுவது மரியாதைக் குறைவு என்பது போன்ற பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் சொல்லித் தரப்படுகின்றன.