தன்னையே உண்டு புதுப்பித்து கொள்ளும் செல்கள்!
நம் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் போனால் மோட்டார் வேலை செய்யாது; தண்ணீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவோம். தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி, நம் வீட்டு வேலைகளை முடிப்போம். உதாரணமாக, அரிசி களைவதற்கு, காய்கறிகள் கழுவிய நீரைப் பயன்படுத்துவோம்.அதேபோல் உடலில் நோய் போன்ற ஒரு திடீர் அழுத்தம் உண்டாகும்போது, உடலில் இருக்கும் 'குளூக்கோஸ்' (Glucose) உட்பட பிற சத்துப் பொருட்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உடலுக்கும் உண்டு. அந்த சமயத்தில், ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் தேவையற்ற பழைய பாகங்கள் அழிக்கப்படும். தேவையற்ற சில புரதங்கள் (Protein) உடைக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்படும். இதை உயிரியலாளர்கள் 'ஆட்டோஃபஜி' (Autophagy) என்கிறார்கள். கிரேக்க மொழிச் சொல்லான இதற்கு, 'தன்னையே உண்ணுதல்' என்று பொருள் (Auto Self - ஆட்டோ செல்ஃப் - தன்னை; phagy - eating - ஈட்டிங் - உண்ணுதல்).ஜப்பானிய அறிவியலாளர் யோஷினோரி ஓஷுமி, (Yoshinori Oshumi) இதைப் பற்றி செய்த முக்கியமான கண்டுபிடிப்புக்குத்தான், 2016 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. லைஸோசோம் (Lysosome) என்ற செல் பாகம் பற்றி உங்கள் பாடத்தில் படிப்பீர்கள். இதை கிறிஸ்டியன் டி டுவே (Christian de Duve) என்ற விஞ்ஞானி, 1955ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். கண்டுபிடித்ததோடு விடவில்லை. தொடர்ச்சியாக 20ஆண்டுகளுக்கும் மேல் ஆராய்ச்சி செய்து லைஸோசோமுக்குள் செல் உறுப்புகளை ஜீரணிக்கக் கூடிய நொதிகள் (Enzyme -என்ஸைம்) இருப்பதை உறுதி செய்தார். லைஸோசோம்களுக்குள் இருக்கும் நொதிகளால் 'ஆட்டோஃபஜி' (autophagy) செயல்பாடு நடக்கிறது என்பதை நிறுவியதற்காக, 1974ஆம் ஆண்டிற்கான மருத்துவ துறைக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. தற்போது நோபல் பரிசு பெற இருக்கும், ஓஷுமி, ஆட்டோஃபஜி (Autophagy) பற்றி ஆராய்ச்சியை 1990ல் தொடங்கினார்.இவர் கண்டுபிடித்தது:• ஒரு செல் உயிரிகளிலும் இந்தச் செயல்முறை இருக்கிறது • இதை அவர், 'ஈஸ்ட்' (Yeast) என்னும் பூஞ்சையை வைத்து நிறுவினார். • மேலும், ஈஸ்ட்களில் மரபணு மாறுபாடு செய்து, ஆட்டோஃபேஜி நிகழ்வைத் தொடக்கி வைக்கும் 15 என்ஸைம்களை (Enzymes)அடையாளம் கண்டார். • ஈஸ்டைப் போலவே பரிணாமத்தின் எல்லா உயிர்களிலும் இந்தப் பண்பு இருக்கிறது என்பதையும் நிறுவினார். • இந்த ஆராய்ச்சி புற்று நோய், பார்க்கின்ஸன் (Parkinson's) நோய், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆராய்ச்சிகளுக்கு உதவும் என்று கருதப்படுகிறது.