சாக்கடல் ரகசியம்
மீன்கள், நண்டுகள் போன்ற நீர் வாழ் உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட கடலுக்கு வந்தால் இறந்துவிடும்! அதனால் அதற்கு சாக்கடல் அல்லது மரணக் கடல் (DEAD SEA) என்றே பெயர் வைத்துவிட்டார்கள். கடல் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இது கடல் அல்ல; உப்பு நீர் ஏரிதான். ஆசிய கண்டத்துக்குத் தெற்கே, ஜோர்டான் நாட்டுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே உள்ளது சாக்கடல். இதன் உப்புத்தன்மை 34.2 சதவிகிதம். இது மற்ற கடல்களைவிட 10 மடங்கு அதிகம். கூடுதலான உப்புத் தன்மையால் இந்த நீரின் அடர்த்தி மனித எடையை விட அதிகமாக இருக்கிறது. எனவேதான் இந்தக் கடலில் யாரும் மூழ்குவதில்லை. மாறாக மிதக்கிறார்கள்! இங்கு வரும் உல்லாசப் பயணிகள் இந்த நீரில் படுத்துக்கொண்டே பேப்பர் படிக்கின்றனர். அதாவது மிதந்துகொண்டே.பூமியிலேயே கடல் மட்டத்திற்குக் கீழே மிகத் தாழ்ந்த பகுதி சாக்கடல்தான். கடல் மட்டத்தில் இருந்து, 423 மீட்டர் கீழே அமைந்து இருக்கிறது. இது, 67 கி.மீ. நீளமும், 18 கி.மீ. அகலமும் கொண்டது. அதிகமான வெப்பம் காரணமாக வருடம் முழுவதும் காய்ந்த வெப்பநிலையே இருக்கும். ஆண்டுதோறும், 50 மி.மீ.க்கும் குறைவான அளவே மழை பெய்கிறது.சாக்கடலில் எல்லா உயிரினங்களும் இறப்பதில்லை. உப்பை உண்ணும் ஹாலோபாக்டீரியம் (Halobacterium), ஹாலோபியம் (Halobium), டுனாலியலா (Dunaliella) போன்ற நுண்ணுயிரிகள் இங்கு நல்லபடியாக வாழ்கின்றன. சாக்கடலின் சுற்றுப்புறங்களில் ஒட்டகம், மலையாடு, காட்டு முயல், நரி, குள்ளநரி, சிறுத்தை போன்ற விலங்குகளும் நூற்றுக்கணக்கான பறவை இனங்களும் காணப்படுகின்றன.இந்தக் கடலில் ஏராளமான மருத்துவ குணங்கள் ஒளிந்துள்ளன. பலவகை தாதுப் பொருட்கள் நிறைந்து இருக்கின்றன. தாழ்வான இடத்தில் அமைந்துள்ளதால் காற்றழுத்தம் மிகக்குறைவு. புற ஊதாக்கதிர்களின் தாக்கமும் மிகக் குறைவாக உள்ளது.