ஞாநி எழுதும் மாலுவின் டயரி (35) - குகையும் நாயும்
“நான் ஒரு நாய் வளர்க்கப்போறேன்” என்று அறிவித்தான் பாலு.“உன்னை வளர்க்கறதே பெரிய பாடா இருக்கு எனக்கு. இதுல ஒரு நாய்க்குட்டி வேறவான்னு உங்கம்மா சொல்லியிருப்பாங்களே?” என்றார் ஞாநி மாமா. “அம்மா சொன்னதை அப்படியே அச்சா சொல்றீங்களே. எல்லாப் பெரிசும் ஒரே மாதிரிதான் யோசிப்பீங்க போலிருக்கு” என்றான் பாலு. “எங்கம்மாவும் என்கிட்ட இப்பிடிதான் சொல்லியிருக்காங்க பாலு” என்றார் மாமா.“நீ எதுக்கு இப்ப நாய் வளர்க்கணும்?” என்று பாலுவைக் கேட்டேன். “அதான் நம்ம கிட்ட ஒரு வாலு இருக்கே. போதாதா? இன்னொரு வாலு வேணுமா?”“நாய் இருந்தாதான் குகையைக் கண்டுபிடிக்க முடியும். நானும் ஏதாவது ஒரு பழைய குகையைக் கண்டுபிடிக்கணும்னு ஆசையா இருக்கு” என்றான் பாலு. “எப்பிடி பாலு திடீர்னு குகைகள் மேல ஆசை வந்துச்சு?” என்று கேட்டார் மாமா.“ஊருக்குப் போனா வீட்டுத் தோட்டத்துலயே குச்சி நட்டு பெட்ஷீட்டை எல்லாம் அது மேல விரிச்சுக் கூடாரம் போட்டு உள்ளே போய் தனியா உட்கார்ந்துகிட்டு பாட்டு கேட்கறது, படிக்கறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். நேச்சுரலாவே ஒரு குகை இருந்தா அதுல போய் உட்காரலாமேன்னு யோசிச்சேன். குகைகள் பத்தி படிச்சப்ப, பிரான்சுல லாஸ்கோங்கற ஊர்ல குகைகளைக் கண்டுபிடிச்ச கதையைப் படிச்சேன்.”“அந்தக் கதையை சொல்லு பாலு” என்றேன்.“மூணு டீன் ஏஜ் பாய்ஸ் அவங்க நாயோட 76 வருஷம் முன்னால, செப்டம்பர் 12ஆம் தேதி அன்னைக்கு அந்த கிராமத்துக்கு பிக்னிக் போயிருக்காங்க. நாய் ஒரு குறிப்பிட்ட இடத்துல நின்னு குரைச்சுகிட்டே இருந்துருக்கு. அங்க பார்த்தா புதருக்குக் கீழே பூமிக்கடியில ஒரு சுரங்கப் பாதை இருந்திருக்கு. அதுல போய் பாத்தா பெரிய குகை. அந்த சுவர் முழுக்க ஆதி மனிதர்கள் வரைஞ்ச விலங்கு ஓவியங்கள். சுமார் 17 ஆயிரத்து முந்நூறு வருஷம் முன்னே இதெல்லாம் வரையப்பட்டதாம். நானும் நம்ம ஊர்ல இந்த மாதிரி குகை எதையாவது கண்டுபிடிக்கணும்னு நினைக்கறேன். அதுக்குதான் முதல்ல நாய் வேணும்” என்றான் பாலு.“அதுக்கு முன்ன தமிழ்நாட்டுல ஏற்கெனவே கண்டுபிடிச்சிருக்கற குகைகளை எல்லாம் போய்ப் பாரு பாலு. புதுக்கோட்டை மாவட்டத்துல நிறைய இருக்கு. குறிப்பா சித்தன்னவாசல். கன்னியாகுமரி மாவட்டத்துல திருவட்டாறு பக்கத்துல திருநந்திக்கரை குகைகள் இருக்கு. அதையெல்லாம் போய்ப் பார்த்தா உனக்கு ஒரு ஐடியா கிடைக்கும்” என்றார் மாமா.நான் மாமாவிடம் சொன்னேன். “மாமா எனக்கு ரெண்டு சந்தேகம் இருக்கு. ஒண்ணு குகைகளைப் பத்தி.இன்னொண்ணு நாய்களைப் பத்தி” என்றேன். “ஒவ்வொண்ணா கேளு” என்றார் மாமா. “குகைகள் எப்பிடி உண்டாகுது? யாராவது குடையறாங்களா, இல்லை, தானாவே உருவாகுமா? இதுதான் மாலுவோட முதல் சந்தேகம்” என்றான் பாலு. “குகைகள் தானா இயற்கையிலயே உருவானவைதான். பூமிக்கடியில எரிமலை வெடிக்கறப்ப, அந்த எரிமலைக் குழம்பு வந்த பாதை சுரங்கப் பாதை மாதிரி மாறி குகையானது இருக்கு. பூமிக்கடியில இருக்கற பாறைகள் நெகிழ்ந்து நகரும்போது உருவானவை இருக்கு. பெரும்பாலானவை பூமிக்கடியில இருக்கற சுண்ணாம்புக் கல் கரைஞ்சு அந்த இடம் ஓட்டையாகி உருவானவைதான்” என்றார் மாமா.“குகைக்குள்ள ஆதி மனிதர்கள் போய் ஓவியம்லாம் வரைஞ்சிருக்காங்களே. அந்த குகைகள்ல சிங்கம், புலி, கரடி மாதிரி விலங்குகள் இருந்திருக்கும் இல்லியா? அதையெல்லாம் துரத்திட்டுதான் வரைஞ்சிருப்பாங்க இல்ல?” என்று கேட்டேன்.“நாம பொதுவா நினைக்கற மாதிரி குகைகள்ல சிங்கம், புலி, கரடியெல்லாம் வாழறதோ வசிக்கறதோ இல்லை. காட்டுப் பகுதியில நிழலுக்காக அங்கே தற்காலிகமா ஒதுங்கறதோட சரி. குகைக்குள்ளேயே வாழற ஜீவராசிகள் பெரும்பாலும் சிலந்தி மாதிரி பூச்சிகள்தான். வௌவால்கள் கொஞ்சம் இருக்கும். அதனால மனுஷனுக்குக் குகைக்குள்ள போகறது ஒண்ணும் பெரிய கஷ்டம் இல்ல” என்றார் மாமா.“ரொம்பப் பெரிய குகை எவ்வளவு ஆழம் இருக்கும்?” என்றான் பாலு. “அதிகபட்சம் பத்தாயிரம் அடிதான். அதுக்கு கீழே போனா குகை சரிஞ்சுடும்” என்றார் மாமா.“சரி நாயைப் பத்தின சந்தேகம் என்ன மாலு? அதோட வாலைப் பத்தியா?” என்று கேட்டது வாலு. “வால்தான் நாயோட மனநிலையை தெரிவிக்கற உறுப்பு. அதோட மகிழ்ச்சி, பயம், அன்பு எல்லாத்தையும் விதவிதமா வாலை வெச்சுக் காட்டும்” என்றார் மாமா.“என்னோட சந்தேகம் நாய் எப்பலருந்து மனுஷங்களோட அன்பா பழகுது ? ஒரு ஆயிரம் வருஷம் இருக்குமா?” என்றேன்.“முப்பதாயிரம் வருஷம் ஆகுதுன்னு கணக்கிட்டிருக்காங்க. மனுஷங்க குரங்கோட ஒரு வகையிலருந்து தோன்றின மாதிரி, வீட்டு நாய்கள் 40 ஆயிரம் வருஷம் முன்னால் இருந்து அழிஞ்சுபோன ஒரு ஓநாய் வகையிலருந்து தோன்றினவை. மனுஷன் விவசாயத்தைக் கண்டுபிடிக்கறதுக்கு முன்ன வேட்டையாடி சாப்பிடறவங்களா இருந்தப்பவே, நாயைப் பழக்கிட்டாங்க.” என்றார் மாமா.“நாய், குகை இருக்கறதை எப்பிடிக் கண்டுபிடிக்குது?” என்று கேட்டான் பாலு. “அதுக்கு குகைன்னு தெரியாது. ஒரு இடத்துல வித்தியாசமா ஏதோ இருக்குன்னு தெரிஞ்சதும் குரைச்சிருக்கும். ஆனா ஆயிரக்கணக்கான வருஷமா மனுஷங்களோட பழகிப் பழகி, நாய்களுக்கு மனுஷங்க கூட உறவாடறது எப்பிடின்னு தெரிஞ்சுடுச்சு. அதுக்குக் கத்துக் குடுத்ததை நினைவுல வெச்சுக்கிட்டு எவ்வளவு வருஷம் ஆனாலும் செய்யும். ரிக்கோன்னு ஒரு நாய் 400 வெவ்வேற பொருட்களை அடையாளம் கண்டுபிடிக்கற அளவுக்கு இருந்திருக்கு. நாயால ஆயிரம் வார்த்தைகள் வரைக்கும் நினைவுல வெச்சுக்கமுடியும்” என்றார் மாமா.“எனக்கு சென்னை நாய்களைப் பார்த்தாதான் பெரிய ஆச்சரியம். ஹெவி டிராஃபிக் இருக்கற ரோட்டுல ரெண்டு பக்கமும் பாத்துட்டு ரோடை சரியா கிராஸ் பண்ற நிறைய நாய்களைப் பாத்திருக்கேன்” என்றது வாலு.“அப்ப நாய்கள்கிட்டருந்து நாம கத்துக்க வேண்டியதும் நிறைய இருக்கு, இல்ல?” என்றார் மாமா.“அதுக்காகத்தான் நான் நாய் வாங்கணும்னு சொல்றேன். நீங்க அம்மாகிட்ட சொல்லுங்க” என்றான் பாலு. “எந்த நாய்னு முடிவு பண்ணு. அப்பறம் சொல்றேன்” என்றார் மாமா. “ரோட்வெய்லர், டாஷண்ட், கோல்டன் ரிட்ரீவர், பக்ஸ், செயின்ட் பெர்னார்ட், பாமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார், ராஜபாளையம்… பெரிய பட்டியலே இருக்கு.” “அண்ணாச்சி பெட்டிக் கடை வாசல்ல ஒரு நாய், குட்டி போட்டிருக்கு. அதுல ஒரு குட்டியைத்தான் எடுத்துகிட்டு வரப் போறேன்” என்றான் பாலு. “be indian. bring indian-ஆ?” என்றார் மாமா. எல்லாரும் சிரித்தோம்.வாலுபீடியா 1: உலகத்தில் இருக்கும் குகைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.வாலுபீடியா 2: உலகத்தில் மொத்தம் 55 கோடி நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறதுவாலுபீடியா 3: குகைகள் பற்றி ஆராயும் படிப்புக்கு Speleology என்று பெயர்