உள்ளூர் செய்திகள்

முடியாது என்பதே கிடையாது

நெப்போலியன் போனபார்ட் 15.8.1769 - 5.5.1821கார்சிகா, பிரான்ஸ்.மாவீரர் என்ற சொல்லைக் கேட்டதும், முதலில் நம் நினைவுக்கு வருபவர் நெப்போலியன் போனபார்ட். சாதாரண போர் வீரராக இருந்து, பிரான்ஸ் பேரரசராக உயர்ந்தவர்.தாயின் ஒழுக்கமான வளர்ப்பும், கண்டிப்பான அணுகுமுறையும் வெற்றிகரமான ராணுவ வீரனாகத் திகழ நெப்போலியனுக்கு உதவின. பிரான்ஸ் ராணுவப் பள்ளியில் வரலாறு, புவியியல் பாடங்களில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்; தரைப்படை வீரனுக்கான பயிற்சிகளை முடித்தார். 1785ல், 2ம் நிலை லெப்டினன்டாக பதவியேற்று, 1796ல் படைத் தளபதியானார். 1804ல், தனது 35வது வயதில் பிரெஞ்சு மக்களின் பேராதரவுடன், பிரான்ஸ் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். அரசியல், பொருளாதார, சட்டத் துறைகளில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். வரிவசூலிப்பதில் மாற்றம் கொண்டுவந்தார்; அரசு வங்கியை உருவாக்கினார்.இவர் வடிவமைத்த சட்டங்களை, பல நாடுகளும், சட்டக் கல்லூரி, பள்ளிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. படைகளை ஒருங்கிணைக்கும் திறன், வழிநடத்தும் திறன், நிர்வாகத் திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றால் மிகவும் புகழ்பெற்றிருந்தார். நெப்போலியனின் போரிடும் உத்தி வித்தியாசமானது. பழமையான போர் முறைகளை மாற்றி, நவீன முறையைப் பின்பற்றினார். படையின் நடுவில் நின்று தாக்கும் நெப்போலியனுக்குத் துணையாக, பக்கவாட்டில் அவரது படையினர் எதிரிகளைத் தாக்குவர். எதிர்பாராத நேரத்தில் வேகமாகப் பாய்ந்து நிலைகுலைய வைக்கும்முறை, கடைசி வரை அவருக்குக் கை கொடுத்தது.புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் சிறு வயதிலேயே அவருக்கு இருந்தது. ஓய்வின்றி உழைத்த நாட்களிலும், சிறைச்சாலையில் இருந்த நாட்களிலும்கூட புத்தகங்களை அவர் ஒதுக்கியதே இல்லை. அரண்மனையில் அதிக புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகத்தை அவர் பராமரித்து வந்தார். படை நடத்திச் செல்லும்போதும், நடமாடும் நூலகமும் உடன் செல்லும். 51 வயது வரை வாழ்ந்து, வரலாற்றில் அழிக்கமுடியாத சுவடுகளை அவர் ஏற்படுத்த முக்கியக் காரணம், அவரது திட்டமிடலே. 'முடியாது என்ற சொல்லே அகராதியில் கிடையாது' என்ற தாரக மந்திரத்துடன் பல வெற்றிகள் பெற்றார். வாட்டர்லூ போர்க்களத்தில், சரியான நேரத்தில் உதவி வந்து சேராததால், பிரிட்டனிடம் தோல்வியைத் தழுவினார். பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல், வாழ்ந்ததற்கான அடையாளத்தை ஏற்படுத்தி, வரலாற்றில் மட்டுமல்ல, எல்லோரது மனத்திலும் இடம்பிடித்துள்ளார் நெப்போலியன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !