ஒவ்வொரு பின்னுக்கும் ஒரு கதை உண்டு!
தபால் தலைகளைச் சேகரிப்பவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பேட்ஜ்களைச் சேகரிப்பவர்களை? பேட்ஜ்களுக்கு இன்னொரு பெயர் 'பின்' என்பது. தமிழ் தொலைக்காட்சி பிரபலமான தீபக், பேட்ஜ்களைச் சேகரித்து வருகிறார். 'என்னுடைய சேகரிப்பிலுள்ள ஒவ்வொரு பின்னுக்கும் ஒவ்வொரு கதை உண்டு' என்கிறார் தீபக்.இது வித்தியாசமான பொழுதுபோக்காக இருக்கே ?ஆம்! இது உலகில் மிகக்குறைவான நபர்களால் பின்பற்றப்படும் பொழுதுபோக்கு. நான் மெட்ராஸ் கோஸ்டல் ரவுண்ட் டேபிள் 162 என்ற அமைப்பின் உறுப்பினராக இருக்கிறேன். இதில் இணைந்த பின்னரே எனக்குப் 'பின்'களைச் சேகரிக்கும் பழக்கம் வந்தது.'பின்' சேகரிப்பு எங்கே தொடங்கியது?இங்கிலாந்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாக ரவுண்ட் டேபிள் தொடங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் இணைய, பணம் செலுத்த வேண்டும். அந்த நிதி மூலம், பள்ளிகளுக்கு உதவி செய்வார்கள். நம் நாட்டிலும் பல மாநிலங்களில் ரவுண்ட் டேபிள் அமைப்பு செயற்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் என தனிப்பட்ட எண்கள் கொடுக்கப்படும். அந்த வகையில் நான் சென்னை நகரிலுள்ள மெட்ராஸ் கோஸ்டல் ரவுண்ட் டேபிள் 162வது அமைப்பின் உறுப்பினராக இருக்கிறேன்.எதற்காக 'பின்' சேகரிப்பு?ஆண்டுதோறும் எங்களுடைய குழுத் தலைவர் ஒரு கருப்பொருளைத் தருவார். அதை அடிப்படையாகக் கொண்டு 'பின்'களைத் தயாரிக்க வேண்டும். உதாரணமாக 'கனவு மெய்ப்பட வேண்டும்' என்ற ஓர் கருப்பொருள் இருந்தால், அதற்கேற்றபடி 'பின்'களை வடிவமைத்து உறுப்பினர்களுக்குக் கொடுக்க வேண்டும். பிற மாநிலத்திலோ, நாட்டிலோ ரவுண்ட் டேபிள் உறுப்பினர்களைச் சந்தித்தால், 'பின்'களைப் பரிமாற்றம் செய்துகொள்வோம்.இதுவரையில் எவ்வளவு 'பின்'களைச் சேகரித்திருப்பீர்கள்?1000க்கும் மேல் இருக்கும். இதனால், எந்த நாட்டிற்குப் போனாலும், அங்கிருக்கும் ரவுண்ட் டேபிள் உறுப்பினர்களைப் பற்றித் தெரிந்துகொள்வேன். அவர்களைச் சந்தித்து நம்முடைய ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு 'பின்'னை க் கொடுப்பேன். அவர்கள் நினைவுப்பரிசாக எனக்கு ஏதாவது 'பின்'னை வழங்குவார்கள். சில சமயங்களில் 'பின்'களைத் தபாலிலும் அனுப்பித் தருவார்கள்.'பின்'களில் என்ன சிறப்பு?ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை முன்வைத்துத்தான் 'பின்'களைத் தயார் செய்வார்கள். அந்தப் 'பின்'களுக்குப் பின்னால், நிச்சயம் ஒரு கதையுண்டு. அது தான் சிறப்பு. நம்முடைய 'பின்'னை ஒருவருக்கு கொடுக்கும் போது, நம்முடைய கதையும் அவர்களோடு சேர்ந்து ஒட்டிக்கொள்ளும். அவர்கள் அதை எப்போது பார்த்தாலும், நாமும் அவர்களின் நினைவுக்கு வருவோம்.