உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் எடிசன்

ஜி.டி.நாயுடுகாலம்: 23.3.1893 - 4.1.1974பிறந்த இடம்: கலங்கல், கோயம்புத்தூர்.சூரியனைப் பார்த்து மணி சொல்லும் காலத்தில், பேருந்துகள் புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவியைக் கண்டுபிடித்தார்; தனது நிறுவனப் பேருந்துகளில், பயணச்சீட்டுகள் வழங்கும் இயந்திரத்தையும் பயன்படுத்தினார். அவர் வேறு யாருமல்ல; தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு என்கிற கோபால்சாமி துரைசாமி நாயுடு.இளம் வயதில் படிப்பில் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தார். நூல்களை வாங்கிப் படித்து தானாகவே அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். ஒரு மோட்டார் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து, அந்தத் தொழிலின் எல்லா நுட்பங்களையும் அறிந்துகொண்டார். பின், வேலையை விட்டுவிட்டு, திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார். இவருடைய வர்த்தகத் திறமையால், குறுகிய காலத்திலேயே பெரும் செல்வந்தர் ஆனார். போக்குவரத்துத் துறையில் கால்பதித்து, பொள்ளாச்சி- - பழனி வழித்தடத்தில் பேருந்து இயக்கினார். வாகனங்களின் அதிர்வு சோதிப்பான், கேமராவில் தூரம் சரிசெய்யும் கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்கும் கருவி, சவரக்கத்தி, பிளேடு, இயந்திர கால்குலேட்டர், விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சுப் பழம், 39 கதிர்கள் கொண்ட மக்காச்சோளம் என, ஏராளமானவற்றை உருவாக்கினார். வாகன ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றத் தேவையில்லாத தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார். இவருடைய கண்டுபிடிப்புகளுக்கான உரிமையை, பல வெளிநாடுகள், ஏராளமான பணம் கொடுத்துக் கேட்டபோதும் வழங்க மறுத்தார். அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க எண்ணி, இந்திய அரசிடம் நிதி கோரினார். அரசாங்கம் ஒத்துழைப்புத் தரவில்லை. தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவை அனைத்தும் தேசத்திற்கு சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில் எதற்கும் காப்புரிமை வாங்கவில்லை. இந்திய அரசு காட்டிய அலட்சியத்தால், விரக்தி அடைந்து, தான் கண்டறிந்த பிளேடு தொழில்நுட்பத்தின் காப்புரிமையை, அமெரிக்க நிறுவனத்துக்கு இலவசமாகவே கொடுத்தார்.நாயுடு கண்டறிந்த வீரியம் மிக்க பருத்திச் செடிக்கு, ஜெர்மனி நாடு, 'நாயுடு காட்டன்' என பெயரிட்டுப் பெருமைப்படுத்தியது. பல லட்சம் மதிப்புள்ள பேருந்துகளை, அரசுக்கு இலவசமாக வழங்கினார். சொந்த முயற்சியில் கோயம்புத்தூரில் பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளைத் தொடங்கினார். தற்போது அவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி கோவை (ஜிசிடி) என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன.இந்தியாவிலேயே முதன் முதலாக மின்மோட்டார் உற்பத்தித் தொழிற்சாலை, கோவையில் தொடங்கப்படுவதற்கும் ஜி.டி.நாயுடுதான் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !