உள்ளூர் செய்திகள்

எம்மொழி செம்மொழி: ஏன் இந்த வேறுபாடு?

'அறஞ்செய விரும்பு' என்பது ஆத்திசூடி. அறமானவற்றைச் செய்ய விரும்ப வேண்டும் என்பது நன்கு விளங்குகிறது. 'அறம் செய விரும்பு' என்று பிரித்தும் படிக்கலாம். இன்னோரிடத்தில் அறச்செயல் என்றும் படிக்கிறோம்.அறஞ்செய, அறச்செயல் ஆகிய இரண்டு பயன்பாடுகளையும் பாருங்கள். அறம் என்பது தான் முதற்சொல். செய, செயல் ஆகியன இரண்டாம் சொற்கள். ஓரிடத்தில் அறஞ்செய என்று வருகிறது. இன்னோரிடத்தில் அறச்செயல் என்று வருகிறது. இந்த வேறுபாடு. ஏன்?தமிழில் 'ம்' என்ற மெய்யெழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களுக்குச் சிறப்பான இடமுண்டு. ஏனென்றால், 'ம்' என்ற மெய்யெழுத்தில் முடியும் சொற்கள் மிகுதியாக இருக்கின்றன. அதனால் அவற்றை எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் பயன்படுத்துவதில்லை.நிலங்கடந்தார், நிலக்கடலைமரஞ்சாய்ந்தது, மரச்சட்டம்பழந்தீர்ந்தது, பழத்தோட்டம்இத்தொடர்களைப் பாருங்கள். இரண்டு சொற்கள் சேர்ந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுக்கொன்று மாறுபட்ட ஒற்று மிகுந்திருக்கிறது.நிலம் கடந்தார் என்னும்போது, 'ங்' வந்து நிலங்கடந்தார் ஆகிறது. நிலம் கடலை என்னும்போது, 'க்' வந்து நிலக்கடலை ஆகிறது.ஏன் இந்த வேறுபாடான நிலைமை?பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் சேர்ந்தால், முதற்சொல்லின் 'ம்' நீங்கி மெல்லினமெய் தோன்றுகிறது. நிலங்கடந்தார், மரஞ்சாய்ந்தது, பழந்தீர்ந்தது. இவற்றில் நிலம், மரம், பழம் ஆகியன பெயர்ச்சொற்கள். கடந்தார், பெற்றார், தீர்ந்தது ஆகியன வினைச்சொற்கள்.பெயர்ச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேர்ந்தால், முதற்சொல்லின் 'ம்' நீங்கி வல்லினமெய் தோன்றுகிறது. நிலக்கடலை, மரச்சட்டம், பழத்தோட்டம். இங்கே யாவும் பெயர்ச்சொற்கள். அதனால் வல்லொற்று வந்தது.அதனால்தான் அறஞ்செய, அறச்செயல் என்ற இருவகைப் பயன்பாடும் வந்தது. - மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !