உள்ளூர் செய்திகள்

எளிமையின் எவரெஸ்ட்!

பிறப்பு: செப்டம்பர் 22, 1931மறைவு : மார்ச் 23, 2017இயற்பெயர்: ஜ.தியாகராஜன்வாழ்க்கையில் நான் என்னவாக இருக்க விரும்புகிறேன் என்பதை முடிவு செய்துவிட்டால், அதை நோக்கிய பயணத்தில் எந்த சமரசமும் செய்யக்கூடாது, எத்தனை சிரமங்கள் வந்தாலும், நம் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.இந்தக் கொள்கையின்படி வாழ்ந்த மனிதர், எழுத்தாளர் அசோகமித்திரன். அவர் இளம் வயதில் ஜெமினி ஸ்டூடியோவின் விளம்பரப் பிரிவில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். ஆனால், எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம்; முடிவு. அவ்வப்போது எழுதிக்கொண்டும் இருந்தார். எனினும் அவர் பார்த்து வந்த வேலை அவரது லட்சியத்துக்கு இடையூறாகவே இருந்தது. ஸ்டூடியோ அதிபரிடம் ஒரு சின்ன மனக்கசப்பு ஏற்பட்டபோது, அந்த அதிபர் இவரிடம் சொன்னார். ''நீ எழுத்தாளன் என்றால், இந்த வேலையெல்லாம் செய்துகொண்டிருக்க மாட்டாய்.” உடனே வேலையிலிருந்து விலகினார் அசோகமித்திரன். அப்போது அவருக்கு வயது 35. கடந்த 23ம் தேதி தன் 86வது வயதில் காலமாகும்வரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர எழுத்தாளராகவே வாழ்ந்திருந்தார்.அதனால், பொருளாதார ரீதியில் அவருக்குப் பல சிரமங்கள் ஏற்பட்டன. அவற்றைப் பொருட்படுத்தாமல், எளிமையாக வாழ்ந்து, தன் மூன்று மகன்களையும் சாதாரணப் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார். இன்று எல்லாரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அசோகமித்திரனோ, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சிறந்த இலக்கியவாதியாகத் திகழ்கிறார்.ஹைதராபாத் சமஸ்தானத்தில் இருந்த சிக்கந்திராபாதில் பிறந்து, வளர்ந்து, பின்னர் சென்னையில் குடியேறிய அசோகமித்திரன், தன் சிறுகதைகள், நாவல்களில் ஹைதராபாத் முதல் சென்னை வரை இருக்கும் சாமான்ய மனிதர்களின் வாழ்க்கையைத் துல்லியமாக எழுதினார். அவரது புத்தகங்கள் படிக்கச் சுலபமானவை. காரணம் மொழி எளிமையாக இருக்கும். அலங்கார வார்த்தைகள் இருக்காது. ஆனால், எளிய சொற்களின் மூலம், வாழ்க்கையின் மிக முக்கியமான அம்சங்களை அவர் வெளிப்படுத்திவிடுவார். நிஜாம் ஆட்சி கால வாழ்க்கையானாலும், சென்னையின் கவர்ச்சியான திரைப்பட உலக வாழ்க்கையானாலும், அவற்றை வாழ்ந்தவர்களின் சின்னச் சின்ன சந்தோஷங்கள், பெரிய பெரிய துக்கங்கள் எல்லாவற்றையும், அவர் ஆழமாக சித்திரித்திருப்பார்.அவருடைய கதைகளில் வரும் பெண் பாத்திரங்கள், அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அவர் சொன்னாலும், அதையெல்லாம் மீறி வாழ்க்கை மீது நம்பிக்கையுடன் அவர்கள் வாழ்வதை, வெளிப்படுத்தியிருப்பார்.அவருடன் நெருங்கிப் பழகிய எல்லா இளைஞர்களுக்கும், அவர் அன்பான வழிகாட்டியாக இருந்தார். தன்னைவிட இருபது, முப்பது வயது சிறியவர்களுடன் பேசும்போதுகூட, அவர்கள் கருத்தை மதித்துக் கேட்பார். என் மகன் தன் 11வது வயதில் அசோகமித்திரனுடைய ஒரு சிறுகதையை குறும்படமாக எடுத்தான். அந்தக் கதையின் முடிவில், அப்பா பாத்திரம் மகன் பாத்திரத்திடம் பேசும் முக்கியமான வரி, நெகட்டிவான கருத்தொடு இருப்பதாக என் மகனுக்குப் பட்டது. அவரிடமே பேசச் சொன்னேன். இருவரும் பேசினார்கள். கடைசி வரியை பாசிட்டிவ் ஆக மாற்றிக் கொடுத்தார் அசோகமித்திரன். இருவருக்கும் வயது வித்யாசம் 53 ஆண்டுகள்!தன் எழுத்தின் வழியாகவும், நேரடி உறவாடலிலும், ஏராளமான இளம் தலைமுறையினருக்கு ஆதர்சமாக விளங்கியவர் அசோகமித்திரன். அவர் போல இன்னொருவர் தமிழில் இல்லை. முக்கிய படைப்புகள்:கரைந்த நிழல்கள், பதினெட்டாவது அட்சக் கோடு, தண்ணீர், மானசரோவர், ஒற்றன், காலமும் ஐந்து குழந்தைகளும், பிரயாணம், இன்று, விடுதலை, அப்பாவின் சிநேகிதர்விருதுகள்சாகித்ய அகாதமிதமிழக அரசு விருதுகள்தேசிய நூலக விருதுபாஷா பரீஷத் விருதுவிளக்கு விருது- ஞாநி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !