உள்ளூர் செய்திகள்

மலர்களே மலர்களே (19) - நீருக்கடியில் நிகழும் அதிசயங்கள்

நஜாஸ் மரினா (Najas Marina) என்னும் நீர்வாழ் தாவரத்தில், பொதுவாக பூங்கொத்து உருவாகும். ஆண் பூ, பெண் பூ என இரண்டும் இந்தப் பூங்கொத்தில் இருக்கும். ஆண் பூவின் காம்பு மட்டும் நீண்டு வளரும். முதிரும் நிலையில் ஆண் பூவின் நீண்ட காம்பு சற்றே வளைந்து அருகில் உள்ள பெண் பூவின் அருகில் சாயும். உடனே மகரந்தப் பை வெடித்து மகரந்தம் நீரில் பரவும். இந்த மகரந்தங்கள் சற்று எடை கூடியவை. எனவே, நீரில் மூழ்கும். அப்படி மூழ்கும்போது, அடியில் உள்ள பெண் பூவில் வந்து படிந்து இனப்பெருக்கம் நடைபெறும்.நீரின் மேலே மகரந்தம் படிந்து பெண் பூவை அடைவது, நீரின் உள்ளே அமிழ்ந்துபோன பூவை அடைவது போன்ற இரண்டு வகை நீர்வழி மகரந்தச் சேர்க்கை (Hydrophily - ஹைட்ரோபைலி) உத்தி குறித்து மட்டுமே இதுவரை ஆய்வாளர்கள் அறிந்திருந்தனர். சமீபத்தில் மீன் காட்சியகம் போன்ற நீர்வாழ் பொருட்காட்சி சாலையில் நடத்தப்பட்ட ஆய்வில், 'ஜூபிளாங்ட்டன்' (Zooplankton) என்னும் மிதவை நுண்ணுயிரிகள், நீருக்கு அடியில் மகரந்தச் சேர்க்கை நடத்துவதற்கு உதவியாகச் செயற்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.வசந்தகால கடலேற்றப் பருவத்தில் (Spring Tides - ஸ்பிரிங் டைட்ஸ்) கடல் கோரை அல்லது கட்டைப் பாசி எனப்படும் 'தாலசிய டெஸ்ட்டுடினம்' (Thalassia Testudinam) பூக்கும். நீர்நிலையின் அடியில் தரைப்பகுதியில் இருந்து சுமார் 1 முதல் 2 அடி உயரத்தில் இந்தத் தாவரத்தில் பெண் பூ பூக்கும். 1 முதல் 5 ஆண் மலர்கள் பூங்கொத்தாகப் பூக்கும். ஒரு ஆண் மலர் சுமார் 16 ஆயிரம் மகரந்தத் துகள்களை உருவாக்கும். இந்த மகரந்தத் தூளைச் சுற்றி மாவுச்சத்து நிரம்பிய தாவர ஒட்டுப்பசை படிந்து இருக்கும். இதன் காரணமாக இந்தத் துகளின் எடை கூடி, நீரில் மெல்ல மெல்ல மூழ்கும். மாலை வேளையில் ஆண் பூ விரிந்து இரவில் சுமார் 2 மணி நேரம் மகரந்தத்தை வெளிப்படுத்தும். காலையில் பெண் பூ மலர்ந்து அடுத்த 3 நாட்கள் பட்டுப்போகாமல் விரிந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !