உள்ளூர் செய்திகள்

உயரம் தொடுவதே முக்கியம்!

ஈடுபாடுஆண்டுத் தேர்வு நெருங்கிக்கொண்டு இருக்கிறது. கணிதம், அறிவியல் போல் இன்னொரு பெரிய படிப்பு சமூக அறிவியல். வரலாறு, புவியியல், பொருளாதாரம், சிவிக்ஸ் என்று எல்லாவற்றையும் கலந்துகட்டி இருக்கும் துறை இது. வரலாற்றைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடியும். புவியியல் என்ன செய்யப் போகிறது. அதைப் படித்து என்ன செய்யப் போகிறோம்?உமா மிஸ்ஸிடம் இதைப் பற்றி ஒருநாள் மாலை, அவர்கள் வீட்டில் படித்துக்கொண்டு இருந்தபோது கேட்டே விட்டேன். சிரித்தார் உமா மிஸ்.“புவியியல் இல்லாமல் இன்னிக்கு மின்சாரமும் கிடையாது, தண்ணீரும் கிடையாது தெரியுமா?”“மின்சாரமா?”“ஆமாம், நிலக்கரி கிடைச்சா தானே, மின்சாரம் தயாரிக்க முடியும்? பூமியில் தண்ணீர் எங்கே இருக்குன்னு தெரிஞ்சா தானே, அதை எடுக்க முடியும்? அதுக்கு புவியியல் வேண்டாமா?”“ஓ!”“நம்ம நாட்டில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே, புவியியல் ஆராய்ச்சி நடந்துக்கிட்டு வருது. மிக முக்கியமான பல அறிஞர்கள் இந்தத் துறையில் வேலை செஞ்சிருக்காங்க. குறிப்பாக சுரங்கத் துறையில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கு.”“சுரங்கத் துறைன்னா?”“பூமிக்குக் கீழே ஏராளமான தாதுப் பொருட்கள் இருக்கு. ஒவ்வோரிடமும் ஒவ்வொரு விதமான நிலவியலைக் கொண்டிருக்கும். பூமி தோன்றி பல ஆயிரம் ஆண்டுகளாயிடுச்சு. இதுல ஒவ்வொரு காலக்கட்டத்துலேயும் பல்வேறு படிவங்கள் பூமிக்குக் கீழே உருவாகியிருக்கும். ஓரிடத்துல தங்கம் இருக்கலாம், இன்னொரு இடத்துல பாக்ஸைட், இன்னொரு இடத்துல நிலக்கரி, வேற சில இடங்கள்ல இயற்கை எரிவாயு... இதைக் கண்டுபிடிப்பதற்கு நிலவியல் தொழில்நுட்பம் தெரிஞ்சிருக்கணும்.”“ஓ!”“ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியா என்ற நிறுவனம் மிகப் பழமையானது. அதுல முக்கியமான ஒருத்தரைப் பத்தி சொல்றேன். அவர் பெயர் சர் சிரில் சாங்கே ஃபாக்ஸ் (Sir Cyril Sankey Fox). இன்னிக்கு இந்தியாவுல பல இடங்களில் பல்வேறு தாதுப் பொருட்கள் இருக்குன்னு கண்டுபிடிச்சவர் இவர் தான். குறிப்பாக, பீகார் மாநிலத்துல மைக்கா சுரங்கத்தையும், ஜார்க்கண்ட் மாநிலத்துல நிலக்கரியையும் பாக்ஸைட் என்கிற தாதுப் பொருட்களின் வளத்தையும் இவர் தான் ஆரம்பத்தில் ஆய்வுசெய்து கண்டுபிடிச்சவர். அதேபோல் ஆல்வார், பரோடா, தார், தரங்கதாரா, டோங்கர்பூர், இடார், பாலம்பூர், பாட்டியாலா, ரெவா, சர்ஜுஜா ஆகிய இடங்களில் தாதுப் பொருட்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிச்சவரும் இவர். பல பழைய சுரங்கங்களை மீண்டும் திறப்பதற்கும் இவரே காரணமானவர். உதாரணமாக, இராஜஸ்தான் மாநிலத்துல ஜாவார் என்ற இடத்துல துத்தநாக சுரங்கத்தை (zinc mine) இவர் தான் மீண்டும் ஆய்வுசெய்து திறக்க வைத்தார். ஜியாலஜிகல் சர்வே ஆப் இந்தியாவுல டைரக்டர் ஜெனரலாகவும் இருந்து ஓய்வுபெற்ற இந்த மனிதரோட ஒரு சுவாரசியமான விஷயம் தெரியுமா?”“என்ன மிஸ்?”“இவர் முதலாம் உலகப் போர்ல பங்கெடுத்துக்கிட்டவர். அப்போ, இவருக்கு ரொம்ப நெருக்கத்துல ஒரு வெடிகுண்டு வெடிச்சது. அதுல இவருக்கு காதுல பாதிப்பு ஏற்பட்டுடுச்சு. பின்னாடி, இந்தியா திரும்பி, நிலவியல் ஆய்வு செய்தபோதும், கடைசிவரைக்கும்கூட இவருக்குக் காது கேட்காது. ஆனால், பூமி தான் தன்னோட ஆர்வம்னு காலம் முழுக்க ஆய்வு செஞ்சுக்கிட்டே இருந்தார். இந்தியாவுல ஓய்வுபெற்ற பிறகும் சும்மா இல்ல, மஸ்கட், ஓமன், எகிப்துன்னு பல நாடுகளுக்குப் பயணம் செஞ்சு, அங்குள்ள பகுதிகளில் நிலவியல் ஆய்வுகள் செஞ்சு, பல தாதுப் பொருட்களைக் கண்டுபிடிச்சார்.அதுமட்டுமல்ல; இவர் இந்திய நிலக்கரி வளம் பத்தியும் நீர் வளம் பத்தியும் எழுதியிருக்கும் புத்தகங்கள் இன்னிக்கும் ரொம்ப முக்கியமானவை. பாக்ஸைட் என்ற தாது பற்றி இவர் செய்த ஆய்வுகள் அவ்வளவு முக்கியமானவை.எண்ணற்ற அறிஞர்களுக்கு இவர் ஆசிரியராக இருந்திருக்கிறார். பலரையும் நிலவியல் துறையில் பயிற்சி கொடுத்து மேம்படுத்தியிருக்கார். அதாவது, நிலத்தையும் அதன் வளத்தையும் நேசிப்பதற்கு ஒரு தனி விருப்பம் வேண்டும். சர்வே செய்யறதுங்கறது அவ்வளவு லேசான வேலையில்லை. தொழில்நுட்பத்தோடு பொறுமையும் கவனமும் வேணும். இதெல்லாம் தான் இந்த மனிதரை தனிச்சு தெரியவெச்சிருக்கு.அதனால் தான், இந்த முறை 36வது சர்வதேச புவியியல் மாநாட்டுல இவரை நினைவுகூரப் போறாங்க.”“ஓ! அது எங்க நடக்குது மிஸ்?”“இப்ப நாம் பேசிக்கிட்டு இருக்கும் இந்தத் தருணத்துல டில்லியில இந்த மாநாடு நடக்குது. 56 ஆண்டுகள் கழிச்சு இப்போதான் இந்த உலக அளவிலான மாநாடு இந்தியாவுல நடக்குது. இதுல தான் சிரில் ஃபாக்ஸுக்கு மரியாதை செய்யறாங்க.”“எப்படி மிஸ்?”“அவர் கண்டுபிடிச்ச மிக முக்கியமான நிலக்கரிச் சுரங்கம், ஜார்கண்ட்ல இருக்கும் ஜாரியா நிலக்கரிச் சுரங்கம். அந்த இடத்துக்கு மாநாட்டுல பங்கேற்க வர்ரவங்களை சுற்றுலா அழைச்சுக்கிட்டுப் போறாங்க. ஒரு மனிதனுடைய ஈடுபாடு எதுல இருக்கிறதுங்கறது முக்கியமில்ல. அது எதுவா வேணும்னாலும் இருக்கலாம். ஆனால், அதுல உச்சத்தைத் தொடணும். அதைத் தான் சிரில் ஃபாக்ஸோட வாழ்க்கை நமக்குச் சொல்லுது.”புவியியல் எவ்வளவு முக்கியமான பாடம் என்பது எனக்குப் புரிந்தது ஒருபக்கம் என்றால், நிலத்தின் வளங்களைத் தேடிப் போனவர்களைப் பற்றிய செய்திகளும் என்னை ஆச்சரியப்படுத்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !