வரலாற்று வாசல் - நம் வீட்டு அங்காடி
மன்னர்கள் காலத்தில் மதுரையில், நாளங்காடி, அல்லங்காடி என, வணிகக் கடைகள் இருந்தன என்று அறிந்திருப்பீர்கள். நாளங்காடிகள் பகலிலும், அல்லங்காடிகள் இரவிலும் இயங்கின. இதேபோன்ற வணிகக் கடைகள் சோழர்கள் ஆட்சியிலும் இருந்துள்ளன. குறிப்பாக, தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய தலைநகரங்களில் இத்தகைய வணிகக் கடைகள் இருந்துள்ளதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.அதிராஜேந்திரன் (கி.பி. 1069 - 1070) காலத்தைச் சேர்ந்த கடை ஒன்றிற்கு, திருபுவனமாதேவி பேரங்காடி என்ற பெயர் இருந்துள்ளது. இந்த அங்காடிக்கு உரிமையாளர், கூத்தன் ஆதிவிடங்கன் என்பவர். 'உள்ளாலை பெரிய அங்காடி'யின் உரிமையாளர், வெண்காடன் ஆடவல்லான். இவர் குற்றாலம் சிவன் கோயிலுக்கு 25 காசுகள் கொடுத்து, மதியம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிக்கும்படி வேண்டியுள்ளார். இவரின் கடை, கங்கைகொண்டசோழபுர நகரத்தின் உட்பகுதியில் இருந்ததால், உள்ளாலை என்ற பெயர் வந்துள்ளது.அதிராஜேந்திரனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த குலோத்துங்கன் (1070 - 1122), விக்ரம சோழன் (1118 - 1135), மூன்றாம் இராஜராஜன் (1216 - 1246) காலங்களிலும், இத்தகைய அங்காடிகள் சிறப்புற்றிருந்தன. திருவிடைமருதூரில் உள்ள குலோத்துங்க சோழன் கல்வெட்டு, திரிபுவனமாதேவி பேரங்காடியையைச் சேர்ந்த குற்றிகம்பன் என்பவர், கோயிலுக்கு நீர் ஊற்றி அபிஷேகம் செய்வதற்கு, காசு கொடையாகக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது.நகருக்கு நடுவில் கடைகள் இருந்தது போலவே, அரச குடியினர் வசித்த அரண்மனைக்குள்ளேயும் அங்காடிகள் இருந்துள்ளன. அதன் பெயர் 'நம் வீட்டு அங்காடி'. இதைத் துறையூரில் உள்ள சிவன் கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மூன்றாம் இராஜராஜன் காலத்தைச் சேர்ந்தது இக்கல்வெட்டு. ஏத்தக்கொடையான் என்பவர், இதன் உரிமையாளர். அரண்மனையைச் சேர்ந்தவர்களுக்குத் தேவையான வணிகப்பொருட்கள் இந்த அங்காடியில் இருந்து விற்கப்பட்டன, என்று கருதலாம்.