சரித்திர சங்கமம்: மலைக்கொன்று பொன்னிக்கு வழிகண்டவன்
படத்தில் இருப்பவர் ஒரு சோழ மன்னர். இவரின் ஆட்சி பொ.யு. 1146 முதல் 1163 வரை இருந்தது. தமிழ், சமஸ்கிருதம் இருமொழிகளிலும் வல்லவராக இருந்தார். இவருக்கு ராசகம்பீரன், முத்தமிழ்த் தலைவன் என்ற பட்டப்பெயர்களும் உள்ளன. சேக்கிழாரும், ஒட்டக் கூத்தரும் இவரின் ஆசிரியர்களாக இருந்தனர். இவரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தைத் தில்லையில் அரங்கேற்றம் செய்தார். அப்போது இந்த மன்னர், இளவரசனாக இருந்தார். பெரியப் புராணக் கதைகள் ஒவ்வொன்றையும் மனத்திற்குள் காட்சிகளாகப் பதித்துக்கொண்டார்.பின்னர் மன்னராக முடிசூடியதும், பெரிய புராணத்தில் வரும் நாயன்மார்கள் வரலாற்றைச் சிற்பங்களாக, தான் எழுப்பிய தாராசுரம் கோயிலில் வடிக்கச் செய்தார். ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளைக் கடந்தும் அந்தக் கோயில் கலைகளின் இருப்பிடமாகத் திகழ்கிறது. மலையமலையில் (ஒகேனக்கல்) ஒரு முறை அடைப்பு ஏற்பட்டு காவிரியில் தண்ணீர் வராமல் தடைபட்டது. இதனால் சோழ வளநாடு, வளம் குன்றியது. மன்னன் தன் படை வீரர்களுடன் சென்று மலையில் இருந்த அடைப்பை வெட்டி நீக்கினார். மீண்டும் காவிரியில் நீர் வரச் செய்தார்.'மலைக்கொன்று பொன்னிக்கு வழிகண்டவன்'என்று தக்கயாகப் பரணியும்,'சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு - வாழவழிவிட்ட வாள்காண வாரீர்'என்று இராசராசன் உலாவும் இந்த மன்னரைப் பற்றி புகழ்கின்றன.தாராசுரத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட இந்த மன்னரின் சிலையும், உடனிருக்கும் அவரின் பட்டத்து அரிசி புவனமுழுதுடையாள் சிலையும், தற்போது தஞ்சை கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளன.யார் இந்த சோழ மன்னர்?விடைகள்: இரண்டாம் ராசராசன்.