சரித்திர சங்கமம்: யார் இந்த விடுதலை வீரர்?
விடுதலைப் போராட்ட வீரர் இவர். 1910ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சங்கணான்குளம் கிராமத்தில் பிறந்தவர்.ஹோமியோபதி மருத்துவத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தன் அண்ணன் சுப்புவுடன் இலங்கைக்குச் சென்றார். அங்கே கொழும்பில் நடந்த சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலுக்குப் பின் ஊர் திரும்பினார்.வீட்டில், மருத்துவத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதாகக் கூறிவிட்டு, மதுரையில் சுபாஷ் சந்திர போஸின் தலைமையை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருந்த முத்துராமலிங்கத்தை சென்று சந்தித்தார். விடுதலைப் போராட்டத்திற்கு, தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார். பின்னர் சுபாஷ் சந்திபோஸின் இந்தியத் தேசிய ராணுவப் படையில் சேர்ந்து சிங்கப்பூரில் பயிற்சி மேற்கொண்டார். அதன் பிறகு பின்னர் மலேசியா, பர்மா, தைவான் போன்ற நாடுகளில் சுபாஷின் படையில் பணியாற்றிய பாண்டியனுக்கு 'நாயக்' (தலைவர்) என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.1944இல் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்டு சிறை சென்றார். சிறையிலிருந்து தப்பி, மலேசியா சென்று 'ஜெய்ஹிந்த நிலையம்' என்ற பெயரில் பேப்பர் கடை நடத்தினார். அவரைக் கண்டுபிடித்த ஆங்கிலேய அரசு, டில்லிக்குக் கொண்டு வந்து சிறையில் அடைத்தது. விடுதலைக்குப் பின் தன் கிராமத்திற்குத் திரும்பியவர் பாத்திரக் கடை, பெட்டிக் கடை, ஜவுளிக் கடை என, தன் வாழ்க்கையைக் கழிக்க, கடைகள் நடத்தினார். தன் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் இந்திய விடுதலைப் போராட்டங்கள் பற்றிக் கூறி வந்த இவர், 2006இல் காலமானார்.யார் இந்த வீரர்?விடைகள்: என்.கே.ஏ. பி (பூலோக) பாண்டியன்.