ஒற்று மிகுவது எப்படி ?
இரண்டு சொற்களுக்கு இடையே ஒற்று மிகுவதும் உண்டு. மிகாமல் இருப்பதும் உண்டு. ஒற்று என்பது தன்மேல் புள்ளியுடைய மெய்யெழுத்து. ஒற்றெழுத்து என்றும் அழைப்பர்.வாக்கியமாக எழுதும்போது முதற்சொல், இரண்டாம்சொல், மூன்றாம் சொல் என்று சொற்களின் நீண்ட சங்கிலி அமைப்பு தோன்றும். அந்த வாக்கிய அமைப்பில் இரண்டு சொற்களுக்கு நடுவில் ஒற்றெழுத்து தோன்றுமா, தோன்றாதா என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும்.மெய்யெழுத்துகள் மொத்தம் பதினெட்டு என்பது தெரியும். அவற்றில் க, ச, த, ப - வரிசை எழுத்துகளில் தொடங்கும் சொல் வாக்கியத்தில் தோன்றும்போது, அச்சொல்லுக்கு முன்னுள்ள சொல்லின் இறுதியில் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துகள் தோன்றுமா? தோன்றாதா? இதுதான் கேள்வி.இவை நான்கும் வல்லின மெய்யெழுத்துகள், ஆகையால் வலிமிகுதல் என்றும் கூறுவர்.சொற்கள் நான்கு வகைப்படும். பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியன அவ்வகைகள். இவற்றில் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் வாக்கியத்தில் மிகுதியாய்த் தோன்றும்.தனியாய் இருப்பது சொல். இரண்டோ இரண்டுக்கும் மேற்பட்டோ சொற்கள் தொடர்ந்தால் அது சொல் தொடர். சொற்றொடர் என்று சேர்த்துச் சொல்வார்கள். சொல்வோம்.இரண்டு பெயர்ச்சொற்களுக்கிடையில் ஒற்று தோன்றுமா? பெரும்பாலும் தோன்றும், வலிமிகும் என்பதே உண்மை.தண்ணீர்க் குடம். பள்ளிக் கூடம். இந்த எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள். தண்ணீர், குடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். பள்ளி, கூடம் - இரண்டும் பெயர்ச்சொற்கள். இவை தொடராய் ஆகும்பொழுது இரண்டாம் சொல் எந்த வல்லின மெய்யில் தொடங்குகிறதோ அந்த ஒற்றெழுத்து மிகுந்தது. கூடுதலாய்த் தோன்றியது. தண்ணீர்க் குடம். இதில் இரண்டாம் சொல் குடம். கு என்பது ககர வரிசை எழுத்து. அதனால் க் ஒற்று மிகுந்தது. தண்ணீர்-க்-குடம். பள்ளிக்கூடம் என்பதும் இவ்வாறுதான்.எடுத்துச் சென்றான், எழுந்து சென்றான். இந்த எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள். இவை இரண்டும் வினைச்சொற்கள். எடுத்து-க்கு வலிமிகுந்தது. எழுந்து-க்கு வலி மிகவில்லை.இலக்கணத்தில் குற்றியலுகரம் பற்றி அறிந்திருப்போம். எடுத்து, எழுந்து ஆகியன உகரத்தில் (து) முடிவதால் இவை குற்றியலுகரச் சொற்கள். எடுத்து என்பதில் கடைசி எழுத்துக்கு முன்னுள்ள எழுத்து வல்லின மெய் என்பதால், அது வன்தொடர்க் குற்றியலுகரம். எழுந்து என்பதில் கடைசிக்கு முன்னெழுத்து மெல்லின மெய் என்பதால் மென்தொடர்க் குற்றியலுகரம்.வன் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகும். 'எடுத்துச் சென்றான்' என்று வந்தது. மென் தொடர்க் குற்றியலுகரத்திற்கு வலிமிகாது. 'எழுந்து சென்றான்' என்றானது. - மகுடேசுவரன்