உள்ளூர் செய்திகள்

வழிகாட்டும் உள்மனசு!

தனிமை

இப்போதெல்லாம் ஓவியா, அவ்வப்போது ஒருமாதிரியான அமைதி நிலைக்குப் போய்விடுகிறாள். திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்ட தோரணை. வார்த்தைகளை ஒவ்வொன்றாகக் தேர்ந்தெடுத்துப் பேசுகிறாள். எதற்கும் உடனே பதில் சொல்வதில்லை. நண்பர்கள் நடுவிலேயே அவளை கொஞ்சம் ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். 'திமிரு', 'ரொம்ப பண்ணிக்கறா', 'சீன் போடறா' என்றெல்லாம் அவளைப் பற்றிப் பேசுவது என் காதுகளுக்கே எட்டிவிட்டது.எனக்குத் தான் மனச்சங்கடம். ஓவியாவுக்கு ஏதேனும் வருத்தமா? சிரமமா? ஏன் இப்படி ஒதுங்கிப் போகிறாள்? அவளிடம் நேரடியாகக் கேட்கத் தயக்கம். உமா மிஸ் மூலமாகக் கேட்கலாம் என்று அவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். ஓவியாவை இயல்பாக இருக்கச் சொல்லி, அறிவுரை சொல்லுங்கள் என்றேன்.“அவ இயல்பாகத்தானே இருக்கா?”“இல்ல மிஸ், ரொம்ப விலகிப் போறா மாதிரி இருக்கு மிஸ்.”“நிச்சயம் இல்ல கதிர். அவ யோசிக்க ஆரம்பிச்சிருக்கா. தன்னைப் பத்தி யோசிக்க, தனக்குன்னு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிவெச்சுக்க ஆரம்பிச்சிருக்கா. தன்னோட குரலைத் தானே கேட்கத் தொடங்கியிருக்கா.”இந்த வார்த்தைகள் எல்லாம் புதிதாக இருந்தன. “இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? இது தனிமை இல்லையா மிஸ்?”“தனிமை தான். ஆனால், நீ நினைக்கறா மாதிரி, இது சோகத்துலயோ, கஷ்டத்துலயோ ஏற்படற தனிமை இல்ல. அவ தன்னைத் தானே பார்த்து பயந்துக்கிட்டு, ஒதுங்கிப் போகல. இது ஆக்கப்பூர்வமான தனிமை.”“ஆக்கப்பூர்வம்னா?”“இன்னிக்கு யாருக்குமே சொந்தமா ஒரு நேரம் கிடைக்கறதில்ல, கதிர். யாரோ சொல்றதை நாம தொகுத்துப் பேசறோம். எங்கேயோ படிச்சதை ஞாபகப்படுத்தி எழுதறோம். யாரோ வழிகாட்டினால், அதை பின்பற்றி போறோம். படிப்படியாக தனித்தன்மையே இல்லாமல் மாறிக்கிட்டு இருக்கோம். எந்த ஒரு வேலையையும் முழுசா முடிக்கவும் முடியலை. உள்மனசு என்ன சொல்லுதுன்னு என்னிக்காவது கேட்டிருக்கியா, கதிர்?”“உள்மனசா? மனச்சாட்சின்னு சொல்வாங்களே, அதையா மிஸ் சொல்றீங்க?”“கரெக்ட்.”“பல சமயம், ரொம்ப பயமா இருக்கும் மிஸ். நான் எதைச் செய்தாலும், அதை வேணாம், வேணாம்னு தான் மிஸ் சொல்லும்.”“கரெக்டா சொன்னே. அந்த உள்மனசு தான் உண்மையான வழிகாட்டி. நமக்குள்ளேயே இருக்கிற தராசு அது. அந்தக் குரலுக்கு நாம மரியாதையே கொடுக்கறதில்ல. எதிர்காலத்துல என்ன செய்யணும்னு திட்டமிடறது, சுயமா முடிவெடுக்கறது, செயல்படுத்தறது எல்லாம் இங்கே இருந்துதான் தொடங்கும். அதைக் கண்டு பயப்படறோம். அதேபோல பல வேலைகளை இப்படிப்பட்ட தனிமையில் தான் செய்ய முடியும்.”“ஓ!”“ஆமாம். நதானியல் ஹாவ்தோர்ன் மிகப்பெரிய அமெரிக்க எழுத்தாளர். 12 ஆண்டுகள் தனிமையிலேயே இருந்தார், எழுதினார். 'ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆப் சாலிட்டியூட்'னு நோபல் பரிசுபெற்ற நாவலை எழுதியவர் காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ். இதுக்காக 18 மாதங்கள் ஒரு அறைக்குள் உட்கார்ந்துக்கிட்டு, எழுதியெழுதி மேம்படுத்தினார். சாமுவெல் பெக்கெட்னு ஒரு பெரிய நாடக ஆசிரியர் இருந்தார். அவரும் தன்னுடைய புகழ்பெற்ற நாடகங்களை எழுத தனிமையில் தான் இருந்தார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல, இசை அறிஞர்களும் தங்களுடைய படைப்புகளை உருவாக்கறதுக்கு தனிமையைத் தான் விரும்புவாங்க. அப்போதான் அவங்களோட எண்ணங்களுக்கு உருவம் கொடுக்க முடியும். எந்தவிதமான வெளி இரைச்சலும் இல்லாமல், அனாவசியமான கவனச் சிதறல் இல்லாமல் வேலை செய்யும்போது, மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க முடியும்.பண்டைய கிரேக்க இலக்கியவாதியான ஹோமரோட மார்பளவு சிலையின் தலைமேல், அரிஸ்டாடில் கை வெச்சுக்கிட்டு யோசிக்கறா மாதிரியான ஓவியம் ஒன்றை, புகழ்பெற்ற ஓவியர் ரெம்ப்ராண்டு வரைஞ்சு இருப்பார். தனிமையின் மகிமையைச் சொன்ன ஓவியம் இது. இதையும் யோசிச்சுப் பாரு. விவேகானந்தர், 1892இல டிசம்பர் 25 முதல் 27 வரை மூன்று நாட்கள், கன்னியாகுமரி கடல்ல இருக்கிற பாறையில் அமர்ந்து, தியானம் செஞ்சுருக்கார். அந்தத் தனிமையும் தியானமும் தான், அவரோட இலட்சியம் என்ன என்பதையே அவருக்குச் சுட்டிக்காட்டிச்சு. பல பேருக்குத் தனியா இருந்தா, பயமாக இருக்கும். என்னென்னவோ கற்பனை செஞ்சுக்குவாங்க. அதெல்லாம் அவங்க மனசுலேருந்து வர்ற பயம் தான். அதனாலேயே எப்பவும் பேசிக்கிட்டு இருப்பாங்க. டி.வி. பார்ப்பாங்க. வானொலி கேட்பாங்க. தனிமைன்னா இருட்டு, சூனியம்னெல்லாம் நினைச்சுப்பாங்க. உண்மையில், தனிமைங்கறது ஒரு வரம். உங்களுக்குள் இருக்கிற உள்மன ஆற்றலை நீங்களே புரிஞ்சுக்கறதுக்கான வழி அது. வெளியே இருந்து எவ்வளவு 'டானிக்' வார்த்தைகள்வேணும்னாலும் சொல்லலாம். ஆனால், உள்மனசு உற்சாகமா உத்தரவு போட்டா, நாம் அடைய முடியாத உயரமே கிடையாது. இதுக்கு அர்த்தம், நாம் வெளியுலகத்தில் இருந்து விலகி போகறதுங்கறது இல்ல. மாறாக, சுயமுடிவு எடுக்கறதுக்கும், செய்ய நினைக்கிற சொந்தவேலைகளை திருத்தமாகச் செய்யறதுக்கும் தனிமையைப் பயன்படுத்திக் கணும்ங்கறதுதான்.வெற்றிபெற்ற எந்தத் தலைவரைப் பார்த்தாலும் ஒரு விஷயம் பொதுவாக இருக்கும். மத்தவங்ககிட்ட கருத்துகள் கேட்பாங்க. ஆனால், கடைசியில அவங்களே நிதானமா, தனிமையில் யோசிச்சு முடிவெடுப்பாங்க. இதுக்குத் தான் தனிமையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக்கறதுன்னு பேரு. இதைத் தான் ஓவியா இப்போ செஞ்சுக்கிட்டு இருக்கா.”தனிமைக்கு இவ்வளவு வலிமை உண்டா என்ற ஆச்சரியம் என்னையும் தொற்றிக்கொண்டது. இனிமேல் உள்மனசு சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !