சிங்கபுரத்துக்கு சண்டையிட்ட ராஜாக்கள்
'ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்' என்று நாம் கதை கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் ஓர் ஊரை பல்வேறு ராஜாக்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் ஆட்சி செய்திருப்பார்கள். அப்படி பல ராஜாக்கள் ஆட்சி செய்த, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்களில் ஒன்று செஞ்சி. செஞ்சி என்றதும், ராஜாதேசிங்குதான் சட்டென்று நம் நினைவுக்கு வருவார். ஆனால், இங்கு நிறைய அரசர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். செஞ்சி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் வழியில் இருக்கிறது. செஞ்சியை, ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி என்று மூன்று மலைகள் சூழ்ந்துள்ளன. இங்குள்ள கோட்டை, ஆனந்தக்கோன் என்பவரால், கி.பி. 1200ல் கட்டப்பட்டது. ராஜகிரி மலையில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. இது, ராஜா கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. அரசியல் தொடர்பான நிகழ்வுகள் ராஜா கோட்டையில் நடந்தன.ஆனந்தக்கோனின் புதல்வர் கிருஷ்ணகோன். வடக்கே அமைந்துள்ள கிருஷ்ணகிரி மலையில் கோட்டையைக் கட்டினார். இது ராணிக்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது. ராணிக்கோட்டையில், தர்பார் மண்டபம் உள்ளது. சாதாரண நாட்களில், ராஜா இங்கு இருப்பார். பல்லவர், சோழர் காலத்தில், செஞ்சி, சிங்கபு(வ)ரம் என்று அழைக்கப்பட்டது. கி.பி. 14, 15ம் நூற்றாண்டுகளில், விஜயநகர, நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்தது. பின் செஞ்சிக்கோட்டையைக் கைப்பற்றுவதில், ஆட்சியாளர்களிடையே பெரும்போட்டி நிலவியது. பீஜப்பூர் சுல்தானியப் படை செஞ்சியைக் கைப்பற்றியது.சிவாஜி, அவர்களிடமிருந்து செஞ்சியை வெற்றி கொண்டார். சிவாஜியின் சார்பில், ராஜாராம் என்பவர் ஆட்சி செய்தார். சிவாஜியின் மறைவிற்குப் பிறகு, ராஜாராமிடமிருந்து செஞ்சியை, டில்லி முகலாயப் படை கைப்பற்றியது. அவர்களின் தளபதி சொரப்சிங் தலைமையில் படை வென்றதால், அவரையே ஆட்சி செய்ய அனுமதித்தனர். சொரப்சிங் கப்பம் செலுத்தும் ராஜாவானார். அவர்தான் தேசிங்கின் தந்தை.சொரப்சிங் மறைவிற்குப் பின், ராஜா தேசிங்கு கப்பம் செலுத்த மறுத்தார். அதனால், கி.பி. 1714ல் போர் ஏற்பட்டது. போரில் தேசிங்கு ராஜா இறந்தார். கோட்டைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.பல போர்களைச் சந்தித்தபின், மிச்சம் இருப்பதுதான் தற்போதுள்ள கோட்டை.மூன்று மலைகளையும் 12 கி.மீ. தூரத்திற்கு மதில் சுவர்கள் இணைக்கின்றன. மலைக்கு கீழேயும் மேலேயும் கோவில்கள் உள்ளன. ராஜா தேசிங்கின் நண்பன் முகமதுகான். அவரின் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்ட மசூதி ஒன்றும் உள்ளது.கோட்டையில் உயர்ந்த கோபுரத்துடன் கூடிய கல்யாண மகால், தானியம் சேமித்த நெற்களஞ்சியம், பீரங்கி மேடை, ராணிகள் குளிப்பதற்காக கட்டப்பட்ட நீச்சல் குளம் என, ராஜாக்களின் காலத்தை, இன்னமும் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.சென்னையில் இருந்து செஞ்சி ௧௬௦ கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவண்ணாமலையில் இருந்து ௫௦ கி.மீ. தூரம்.கோட்டைக்குள் நுழைய, கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே. வெயில் காலம் என்பதால், காலை வேளையிலேயே மலை மீது சென்று, இறங்கி விடுவது நல்லது.