சரித்திரம் பழகு: இந்தியாவில் உள்ள எகிப்து மம்மிகள்!
இந்தியாவின் ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ளது ஆல்பர்ட் (Albert Museum) அருங்காட்சியகம். ஜெய்ப்பூரின் ராஜாவாக இருந்த மகாராஜா ராம்சிங், இங்கிலாந்தில் இருந்து வரும், வேல்ஸ் இளவரசரை வரவேற்க, ஓர் அரண்மனையைக் கட்டினார். பின்னர் அதுவே அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்துக்கு, வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட், பிப்ரவரி 6,1876ஆம் ஆண்டு வருகை புரிந்தார். அவரது பெயராலேயே இந்த அருங்காட்சியகமும் அழைக்கப்படுகிறது.இந்த அருங்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான பல பொருட்கள் உள்ளன. அவற்றில் ஒன்றாக, எகிப்து நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட மம்மி (Mummy) ஒன்றும் உள்ளது. இந்த மம்மியின் பெயர், டுட்டு (Tutu). இது ஓர் இளம் பெண்ணின் மம்மி. 2,௪00 ஆண்டுகள் பழமையானது. ஜெய்ப்பூர் மன்னர் சவாய் ஈஸ்வர் சிங் (Sawai Ishwar Ssing) என்பவரால், 1887ஆம் ஆண்டு, எகிப்தில் இருந்து, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.கடந்த 2020 ஆகஸ்டில் ஜெய்ப்பூரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது இந்த மம்மி, கண்ணாடி பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டு, அருங்காட்சியகத்தின் மற்றோர் இடத்தில் வைக்கப்பட்டது. அதற்கு முன் நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அந்த மம்மி ஒரே இடத்தில் இருந்தது.பழங்கால எகிப்து அரச குடும்பத்தினர், அவர்களின் வழித்தோன்றல்கள் இறந்தால், அவர்களின் உடல்களைப் பதப்படுத்திப் பாதுகாத்தனர். அவைதான், மம்மிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் கோல்கட்டா, லக்னோ (உத்தரப் பிரதேசம்), மும்பை, ஹைதராபாத், வதோதரா (குஜராத்) நகரங்களில் உள்ள, அருங்காட்சியகங்களிலும் மம்மிகள் உள்ளன.