உள்ளூர் செய்திகள்

நீ வாழ்க அனிச்சமே

அனிச்சமலர், மென்மைத் தன்மை உடையது. இலேசானது. மோந்ததும் வாடிவிடும் இயல்பு கொண்டது. காம்பு களையப்பட்டுத் தலையிற் சூடப்படுவது. பிற மலர்களுடன் சேர்த்தும் கட்டப்பட்டு மாலையாக பயன்படுத்தப்பட்டது.அழகிய நிறமுடையது. மலரின் இதழ்களில் வரி கொண்டது. மரத்தில் பூக்கும் (கோட்டுப் பூ). முல்லை நிலத்துப் பூ. இளவேனிற் பருவத்தில் மலரும்.அதுவும் இரவுப் பொழுதில் மலரும். இவ்வாறு அனிச்ச மலர் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன, சங்க இலக்கியங்கள். திருவள்ளுவரும் அனிச்சத்தை மெல்லியத் தன்மைக்கே பயன்படுத்துகிறார். முகர்ந்தவுடனே வாடிவிடுவது அனிச்சம். அதுபோல முகத்தில் சிறு மாறுபாடு தெரிந்தாலும், விருந்தினர் உடனே வாடி விடுவிடுவர் என்பதை,'மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்துநோக்கக் குழையும் விருந்து' என்று குறிப்பிடுகிறார்.பொது நோக்கில் அனிச்சத்தைப் பார்த்தவர், அடுத்து பெண்களிடத்தும் அதனைப் பொருத்திப் பார்க்கிறார். பெண்ணின் பாதங்களுக்கு, இடைக்கு ஒப்புமை படுத்தியது போதாது என்று அவளின் ஒட்டுமொத்த மேனியும் அனிச்ச மலரினும் மெல்லியத் தன்மை கொண்டது என்கிறார். 'நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்மென்னீரள் யாம்வீழ் பவள்''அனிச்சப்பூவே, நீ மிகவும் மென்மைத் தன்மையைப் பெற்றிருக்கிறாய்! நீ வாழ்வாயாக! ஆனால் நான் விரும்பும் பெண், உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள்' என்று அனிச்சப் பூவை வாழ்த்துவது போல் 'நீ எல்லாம் என்ன மென்மை' என்று எள்ளல் செய்கிறார்.இன்னொரு இடத்தில் அனிச்ச மலரை காம்பு நீக்காமல் சூடிக்கொண்டாள் அப்பெண். அதனால் அவள் என்ன ஆனாள்?'அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்குநல்ல படாஅ பறை”அவளோ மிக மிக மெல்லியவள். அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளி எறிய வேண்டும் என்பதைக் கூட அறியாமல், தலையில் சூடிக்கொண்டாள். விளைவு, காம்பின் பாரம் தாங்காமல் அவள் துன்பத்தில் துவண்டாள். அதனால் இசைக்கும் பறை ஒலிகள், அவளுக்கு நல்லனவாக கேட்கவில்லை என்று குறிப்பிடுகிறார். அதாவது துன்பத்தில் வருந்தும் போது இசை அவள் செவிகளுக்கு எட்டவில்லை என்கிறார்.பறவையின் சிறகா? அது என்ன அத்தகைய மென்மையானதா என்ன?'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்'பெண்களின் பாதங்களுக்கு, அனிச்ச மலராயினும், அன்னப்பறவையின் இறகாயினும் இரண்டுமே நெருஞ்சி முள் தைத்தது போன்ற துன்பத்தையே தரும். அத்தகைய மெல்லியக் கால்களைக் கொண்டவர்கள் பெண்கள் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !