உள்ளூர் செய்திகள்

மாசாத்துவான்...மாநாய்கன்...

பொருள் உற்பத்தியும், வாணிபமும்தான் நாகரிகங்கள், அரசுகள் தோன்றுவதற்கான அடிப்படை. பண்டைத் தமிழகத்தில் வேளாண் உற்பத்தி பெருகி, வாணிபம் சிறப்பாக நடைபெற்றதால்தான், சேர, சோழ பாண்டிய அரசுகள் தோன்றின. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில், தமிழக வணிகர்கள் எப்படி வணிகம் செய்தார்கள்? இந்தக் காலத்தைப் போலவே, அந்தக் காலத்திலும் வணிகம் தரைவழியாகவும், கடல்வழியாகவும் நடந்தது. தரைவழி வணிகர்கள், பெரிய குழுக்களாகச் சேர்ந்து வண்டிகளிலும், பொதிமாடுகள் மீதும், கழுதைகள் மீதும் பண்டங்களை ஏற்றிக்கொண்டு ஊர் ஊராகப் போய் வியாபாரம் செய்தார்கள். கடல்வழி வணிகம் இரு வழிகளில் நடந்தது. தோணிகளில் பண்டங்களை ஏற்றிக்கொண்டு, கரையோரமாகவே பயணித்து, பிற பகுதி மக்களிடம் விற்பனை செய்வது ஒரு வழி. அடுத்து, கப்பல்களில் பொருட்களை ஏற்றிக்கொண்டு, கடல் கடந்த நாடுகளுக்குப் போய் வணிகம் செய்வது மற்றொரு முறை.வணிகர்கள் குழுக்களாக ஒருங்கிணைந்து அரசர்களின் ஆதரவோடு செயல்பட்டார்கள். இந்த வணிகக் குழுக்களுக்கு 'சாத்துகள்' என்று பெயர்.தரைவழி வணிகச் சாத்தின் தலைவருக்கு 'மாசாத்துவான்' என்ற பெயர் இருந்தது. கடல்வழி வணிகச் சாத்தின் தலைவனுக்கு 'மாநாய்கன்' என்று பெயர். சிலப்பதிகாரத்தின் நாயகன் கோவலனின் தந்தை, தரைவழி வணிகக்குழு ஒன்றின் தலைவன் மாசாத்துவான். நாயகி கண்ணகியின் தந்தை, கடல்வழி வணிகக்குழு ஒன்றின் தலைவன் மாநாய்கன்.எங்கெல்லாம் வணிகம் செய்தார்கள்: தமிழக வணிகர்கள், வடக்கே கங்கைக் கரை முதல், தெற்கே இலங்கை வரை வணிகம் செய்தார்கள். மேற்கே எகிப்து, பாபிலோனியா, ஏசிரியா (Assyria), பிற்கால கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளிலும், கிழக்கே சாவகம் (Java Islands), சுமத்திரா (Sumatra Islands), சீனா போன்ற நாடுகளிலும் வணிகத்தில் ஈடுபட்டார்கள்.கிரேக்க அறிஞர் ஹிப்போகிரிட்டஸ், மிளகை 'இந்திய மருந்துப்பொருள்' என்று குறிப்பிட்டார். கிரேக்க மொழியில் இஞ்சிக்கு ஜிஞ்சிபெரிஸ் (Zingiberis) என்று பெயர். இது 'இஞ்சிவேர்' என்கிற தமிழ்ச் சொல்லில் இருந்தே தோன்றியது.ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்வாசனைப் பொருட்கள்: மிளகு, ஏலம், இஞ்சி மரவகைகள்: தேக்கு, கருங்காலி, நூக்கு (கருங்காலி போன்ற மரம்), சந்தனம் ஆடை வகைகள்: பருத்தி, பட்டு, மஸ்லின். ஆபரண மணிகள்: முத்து, ரத்தினம் விலங்கினங்கள்: புலி, சிறுத்தை, யானை, குரங்கு, மயில், கிளி, வேட்டைநாய், சில வகை பாம்பு இனங்களும்கூட ஏற்றுமதி செய்யப்பட்டன.இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள்கண்ணாடிப் பொருட்கள், குதிரைகள். தமிழக அரசர்கள் தங்களது கருவூலத்தின் பெரும்பகுதியை அரேபியக் குதிரை களுக்காகச் செலவு செய்தார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !