உள்ளூர் செய்திகள்

ஒரே ஜோடியோடு வாழும் கடல் வாழ்வி!

பஃபின் (Puffin)வேறு பெயர்: கடல் கிளி, குப்பி மூக்கன்குடும்பம்: அல்சிடே (Alcidae)காணப்படும் இடம்: வட துருவம் (உலகின் 60 சதவீதம் பறவைகள் ஐஸ்லாந்தில் வாழ்கின்றன.)வாழும் பகுதி: கடல் ஆயுட் காலம்: 20 முதல் 25 ஆண்டுகள் வரைஉலகில் மொத்தம் மூன்று வகையான பஃபின்கள் காணப்படுகின்றன. அட்லான்டிக், பஃபின் (Atlantic puffin), ஹார்ண்டு பஃபின் (Horned puffin,) மற்றும் ட்ஃப்டத் பஃபின் (Tufted puffin). இதில் அட்லான்டிக் பஃபின் மிகவும் பரவலாகக் காணப்படும் வகை. இந்தப் பறவைகள் எப்போதும் கூட்டமாக வாழக்கூடியவை. இதை காலனி என்று சிலர் அழைப்பார்கள். இந்தப் பறவை இறக்கும் வரை ஒரே ஜோடிப் பறவையோடுதான் வாழும். பஃபின் என்றாலே அதன் நிறமும், முக்கோண அலகும்தான் முதலில் நினைவிற்கு வரும். முதுகும் தலைப்பகுதியும் கருப்பு நிறத்தில் இருக்கும். முகம், வயிற்றுப் பகுதி வெண்மை நிறத்தில் காணப்படும். இதன் அலகு, அடர் இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிறம் கலந்து காணப்படும். இனப்பெருக்க காலத்தின்போது, அலகில் பளீர் நிறத்தில் வரிகளைக் காணலாம். இதன் கால்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நீர் பறவைகளுக்கு இருப்பதுபோல விரல்கள் ஒட்டிக்கொண்டு தட்டையாக இருக்கும். கடலில் வாழும் இந்தப் பறவைகளுக்கு மீன்கள் முக்கிய உணவு. எனினும் கடலில் இருக்கும் மற்ற சிறு உயிரினங்களையும் உண்ணும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் தான் நிலப்பரப்புக்கு வரும். அங்கு பொந்துகளை அமைத்து பெண் பறவைகள் முட்டையிடும். ஆண், பெண் இரு பறவைகளுமே மாறிமாறி கடலுக்குள் சென்று இரை தேடும். அப்போது அவற்றில் ஒரு பறவை முட்டையைப் பாதுகாக்கும். ஏனெனில் பல சமயங்களில் நரி, கடல் புறா போன்ற உயிரினங்கள் முட்டையைத் தின்றுவிடும். இது ஆண்டுக்கு ஒரே ஒரு முட்டைதான் இடும். கடலில் 20 அடிக்கும் மேலான ஆழத்தில் இப்பறவையால் செல்ல முடியும். நீருக்குள் ஆழ்ந்து செல்வதால், மூக்குப் பகுதியில் நீர் உள்ளே புகாதவாறு அடைப்பான் (flap) பாதுகாக்கும். இது ஒரே சமயத்தில் 10க்கும் மேற்பட்ட மீன்களைப் பிடித்து, அலகில் நேர் எதிர்வாக்கில் அடுக்கி வைத்துக்கொண்டு பொந்துக்குத் திரும்பும். பறவைக் குஞ்சுக்கு, மீன்களைக் கொடுத்து தானும் உண்ணும். குஞ்சுகள் ஆறு வாரங்கள் வரை பெற்றோரின் அரவணைப்பில் இருக்கும். பின்னர் இறகுகள் முளைத்ததும் பறக்கத் தொடங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !