பெயர் சூட்டல்
உங்கள் வகுப்பில் எத்தனை பேர் இருப்பார்கள்? எத்தனை பெயர்கள்?! அது சரி, இந்தப் பெயர் வைக்கும் வழக்கம் எப்படி வந்தது? கோடிக்கணக்கான மனிதர்கள் உள்ள உலகில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அடையாளப்படுத்துபவை பெயர்களே. பெயர்கள் பெற்றோரின் விருப்பம், நம்பிக்கை சார்ந்து வைக்கப்படுகின்றன. ஆண், பெண் பாலினம் சார்ந்தும் பெயர்கள் வேறுபடுகின்றன. சில பிள்ளைகள் வளர்ந்து தங்களுக்கென்று புதுப்பெயர் வைத்துக்கொள்வர். அதை அரசாங்கப் பதிவேட்டிலும் பதிவு செய்து கொள்வர்.குழந்தைக்குப் பெயர் சூட்டும் வழக்கம் ஒரு சடங்காகவும் விழாவாகவும் நடைபெற்று வந்திருக்கிறது.தங்கள் முன்னோரின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் மரபு சங்க காலத்திலேயே இருந்திருக்கிறது. தாத்தாவின் பெயரை பெயரனுக்கு வைக்கும் பழக்கம் இருந்துள்ளதை,'சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே' என்ற நற்றிணை வரியின் வாயிலாகவும், 'எந்தைப் பெயரனை யாங்கொள்வோம்' என்ற கலித்தொகைப் பாடல் வாயிலாகவும் அறியலாம்.ரோஜாவை என்ன பெயரில் அழைத்தாலும் அது வாசமாகத்தான் இருக்கும் என்பார்கள். நமக்குப் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். 'இவர் இந்தச் சமூகத்திற்கு நன்மை செய்தார்' என்று பெயர் எடுக்க முயல்வோமே..!