வலி மிகுதல் பகுதி 24 - வாக்கியத்தை முழுமையாக்கும் இடைச்சொற்கள்
பெயருக்கும் வினைக்கும் இடையில் தோன்றுபவை, இடைச்சொற்கள். இடைச்சொற்கள் இருப்பதால்தான், ஒரு சொற்றொடரும், நீண்ட வாக்கியமும் முழுமையான பொருள் பெறுகின்றன.எ.கா: 'முருகனா?' என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். 'முருகன் + ஆ' என்று ஆகியிருக்கிறது. முருகன் என்பது பெயர்ச்சொல். ஆ என்பதுதான் இடைச்சொல். இங்கே வினாப்பொருளில் வந்தது. ஆ என்பது இல்லாவிடில், அங்கே வினாப்பொருள் தோன்றியிருக்காது. 'பார்த்தாயா?' என்ற சொல்லில், 'பார்த்தாய் + ஆ' என்று ஆகியிருக்கிறது. பார்த்தாய் என்பது முன்னிலை வினைமுற்று. ஆ என்பது வினாப்பொருளை உணர்த்த வந்த இடைச்சொல். இவ்வாறு, இடைச்சொற்கள் என்பவை, பெயரோடும் வினையோடும் முன்னும் பின்னும் சேர்ந்து வந்து பொருள் உணர்த்தும்.உவம உருபுகள் (போல, புரைய), வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு), வினா எழுத்துகள் (ஆ, ஓ), உணர்ச்சிச் சொற்கள் (அட, ஐயோ, ஆகா) என்னும் பலவும் இடைச்சொற்களாகின்றன. சொல்லுருபுகள் மட்டுமன்றி, தனிச் சொற்களாகவும் இடைச்சொற்கள் இருக்கின்றன. இனி, முன்பு, பின்பு, முன்னர், பின்னர், மற்று, கொல், மன் போன்றவையும் இடைச்சொற்கள்தாம். இடைச்சொற்கள் அமையத் தோன்றுபவை இடைச்சொற்றொடர்கள்.போல என்னும் உவம உருபுக்கு வலி மிகும். போல என்பதை முடிந்தவரை வினையெச்ச உவமையாகப் பயன்படுத்துவது சிறப்பு. அதாவது போல என்பதை அடுத்தொரு வினைச்சொல் வரவேண்டும். 'குயில் போலத் தெரிந்தது', 'புலி போலப் பாய்ந்தான்', 'கண்போலக் காத்தான்'.அன்ன, இன்ன ஆகியவை பெயரெச்ச உவமை உருபுகள் என்கிறார் நன்னூலார். இத்தகைய உவம உருபுகள் பெயருக்குத் தோன்ற வேண்டும். பெயரெச்சத்திற்கு வலி மிகக்கூடாது. 'கடலன்ன காமம்' என்கிறது குறள். போன்று என்பது மென்தொடர்க் குற்றியலுகரம் என்பதால் வலி மிகக்கூடாது. 'பழம் போன்று சுவைத்தது'. இனி, என்ற சொல் எங்கே வரினும் கட்டாயம் வலி மிகும். இனிப் பிறப்பது, இனிக் கூறுவான்.முன்பு, பின்பு ஆகியவை மென்தொடர்க் குற்றியலுகரங்கள் என்பதால், வலி மிகுதல் இல்லை. 'முன்பு கொடுத்தது', 'பின்பு பணிந்தான்'. முன்னர், பின்னர் ஆகிய இரண்டு சொற்களுக்கும் வலி மிக வேண்டும். முன்னர்க் கண்டது, பின்னர்த் தெரிந்து கொண்டான். மற்று, கொல், மன் போன்ற இடைச்சொற்களில், கொல் என்பதற்கு வலி மிகல் இல்லை. 'தெய்வம் உண்டு கொல்', 'இனிது கொல்'. - மகுடேசுவரன்