வலி மிகுதல் பகுதி - 35 - எண்ணுப் பெயரும் திசைப் பெயரும்
இரண்டு சொற்களுக்கிடையே வலி மிகுவிப்பதற்கு அது தொகையா, தொடரா என்று பார்த்து முடிவெடுத்தோம். எல்லா சொற்களையும் தொகை, தொடர் கருத வேண்டியது இல்லை. சில வகைச் சொற்கள் அவற்றின் தன்மையால் வேறு வகையில் சேரும்.எடுத்துக்காட்டாக, ஒன்று இரண்டு மூன்று போன்ற எண்ணுப் பெயர்ச் சொற்களை எடுத்துக்கொள்வோம். எண்ணுப் பெயர்களில் எட்டுக்கும் பத்துக்கும் கட்டாயம் வலி மிக வேண்டும். எட்டுத் தொகை, பத்துப் பாட்டு. பிற எண்கள் எவற்றுக்கும் வலி மிகுதல் கூடாது. பிற எண்களில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது ஆகியவற்றை அடுத்து, வருமொழி வல்லினத்தில் வந்தாலும், வலி மிகக்கூடாது. ஒன்றும் இரண்டும் ஒரு, இரு என்றாகிவிடும்.ஒன்று + கை = ஒரு கை (இங்கே ஒன்று கை என்று எழுத இயலாது)இரண்டு + குருவிகள் = இரு குருவிகள்இங்கே இரண்டு குருவிகள் என்று பிரித்தே எழுதினாலும் தவறில்லை. ஆனால் வலி மிகுதல் கூடாது.மூன்று கடைகள், நான்கு சக்கரங்கள், ஐந்து பாடங்கள், ஆறு கேள்விகள், ஏழு புத்தகங்கள், ஒன்பது கோள்கள் என்று வலி மிகாமல் இயல்பாக எழுத வேண்டும். இருபது, முப்பது போன்ற பத்தின் மடங்கு எண்களுக்கும் இது பொருந்தும். இருபது தலைகள், முப்பது பக்கங்கள், தொண்ணூறு கிழமைகள் என இயல்பாக எழுதலாம். அடுத்து திசைப்பெயர்கள் வருமிடத்திலும் பார்த்து வல்லொற்றுப் போட வேண்டும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று வந்தால் வலி மிகும். கிழக்குக் கரை, மேற்குத் தொடர்ச்சிமலை, தெற்குப் பக்கம், வடக்குத் தெரு என்று அங்கே வல்லொற்று மிகும்.கிழக்கு என்னும் சொல் கீழ், கீழை என்றும் மாறும். அங்கும் வலி மிகுவிக்க வேண்டும். கீழ்த்திசை, கீழக்கரை. மேற்கு என்னும் சொல் மேல், மேலை என்று மாறும். மேலை என்பதோடு வலி மிகுவித்துவிடலாம். மேலைத் தேயங்கள். வடக்கும் தெற்கும் வருமொழியோடு சேர்கையில் வட, தென் என்று மாறும். வட என்று வந்தால் வலி மிகுதல் கூடாது. வடபுறம், வடகிழக்கு. தென் என்பதும் இயல்பாக நிற்கும். தென் கிழக்கு, தென் பகுதி.ய், ழ் என்று முடியும் சில சொற்களை அடுத்து வருமொழி வல்லினத்தில் வந்தால் வல்லொற்று மிகாமல் மெல்லொற்று மிகும்.வேய் + குழல் = வேய்ங்குழல்பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு.பாழ்ங்கிணறு என்பதைத்தான் பாழுங்கிணறு என்று கூறுகிறோம். - மகுடேசுவரன்