அமைதி அமைதி!!!
தனது நாட்டில் அடிக்கடி போட்டி நடத்தி வெற்றி பெறுகிறவர்களுக்கு சிறந்த பரிசு தருவது ஒரு மன்னனின் வழக்கம். 'அமைதி' என்பதை சரியாக வெளிப்படுத்தும் ஓவியம் வரைகிறவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.நாட்டில் உள்ள சிறந்த ஓவியர்கள் எல்லாம் போட்டியில் பங்கேற்றனர். அமைதியைப் பிரதிபலிக்கும் பல ஓவியங்கள் அரண்மனையில் வந்து குவிந்தன.ஒவ்வொரு ஓவியமாக மன்னர் பார்வையிட்டுக் கொண்டே வந்தார். ஓவியர்களின் கற்பனையில் அமைதி அழகாக வெளிப்பட்டிருந்தது.அழகான ஏரியை ஒரு ஓவியர் வரைந்திருந்தார். ஒரு அழகிய மலை அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் வரைந்திருந்தனர்.ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து கொட்டும் அருவி படம் வரையப்பட்டிருந்தது. அதே ஓவியத்தில் இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. சற்று உற்றுப் பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”சம்பந்தப்பட்ட ஓவியர் மன்னரின் முன்னால் வந்தார்.“இந்த ஓவியம் பார்க்க அழகாக இருக்கிறது. அதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல... இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி! அப்படிப் பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன், அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்.-பொன். வாசுதேவன்