ஏழை தாத்தாவுக்கு ரூ. 17 லட்சம் உதவி!
உதவி செய்ய மனமிருந்தால் போதும்; அது மாநிலத்தையோ, மதத்தையோ பார்ப்பதில்லை என்பதை நிரூபித்திருக்கிறது காஷ்மீர் தாத்தாவுக்கு உதவிகள் குவிந்த சம்பவம். ஜம்மு-காஷ்மீர் சமூக நலத்துறை அதிகாரியான ரஞ்சன் ஜோட்ஷி, ஏழைகளுக்கு உதவித்தொகை பெற்றுத்தரும் பணிகளைச் செய்து வருகிறார். இந்நிலையில் தான், கடந்த டிசம்பர் கடைசியில், அனந்தநாக் (Anantnag) மாவட்டத்தின் ஹபத்னார் குக்கிராமத்தைப் பார்வையிடச் சென்றார் ரஞ்சன். அங்கு, 80 வயதான மௌசுதீன் தாத்தாவின் (Mouzudin Bhat) குடும்பத்தைக் கண்டு மனமுடைந்து போனார் ரஞ்சன். “கிட்டத்தட்ட பட்டினியால் உயிரை விடும் நிலையில் இருந்த அந்தக் குடும்பத்தைக் கண்டபோது அதிர்ந்து போனேன். மௌசுதீன் தாத்தா, அவர் மனைவி, மருமகள் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகள், நான்கு நாட்கள் சாப்பிடாமல் கிடந்தனர். எழுந்து அமரக்கூட தெம்பின்றி அவர்கள் தவித்தனர். எனது சர்வீசில் 70க்கும் அதிகமான கிராமங்களுக்குச் சென்றிருக்கிறேன். விதவைகள், முதியோர், அனாதைகள் என்று பலரைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவர்கள் அளவுக்கு வறுமையின் துயரால் வாடியவர்களைப் பார்த்ததில்லை. அன்று என் மனம் சொல்ல முடியாத வேதனையில் தவித்தது. இதுபோதாதென்று, மூன்று அடிக்கு கடும் உறைபனி வேறு அப்பகுதியைச் சூழ்ந்திருந்தது. என்னால் இயன்ற அளவுக்கு உதவியை செய்துவிட்டு வந்தேன்.” என்கிறார் ரஞ்சன் ஜோட்ஷி. அதன் பிறகு வீட்டுக்குச் சென்றும், ஜோட்ஷியின் சிந்தனைகள் மௌசுதீன் தாத்தா குடும்பத்தைச் சுற்றியே வந்தது. அவரால், அன்றிரவு உறங்க முடியவில்லை. “இந்த உதவி போதாது என்று மனசாட்சி என்னை வருத்தியது. அவர்களது குடும்பத்தில் வேலை பார்த்து வந்த மௌசுதீனின் மகனை போலீஸ் பிடித்துச் சென்றிருந்தது. அவர்களின் நிலையை ஆவணப்படுத்துவதற்காக, வீடியோ எடுத்து வைத்திருந்தேன். என் நண்பர்கள் உதவியுடன், அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன். இதன் விளைவாக, மும்பை, டில்லி மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் போன் செய்து, மௌசுதீனுக்கு எப்படி உதவுவது? என்று என்னிடம் கேட்டார்கள். சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்குக்கே பணத்தை அனுப்பக் கோரினேன். 4 நாட்களில் 17 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்ந்தது. இவ்வளவு பெரிய தொகையை மக்கள் அளிப்பார்கள் என்று என் கனவில்கூட எதிர்பார்க்கவில்லை. இப்போது அந்தப் பணத்தை அவரின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிட்டேன். மதம், மொழி, நிறம், ஜாதி கடந்து நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது” என்கிறார் ஜோட்ஷி.