சமூக அக்கறையே ஊன்றுகோல்!
கவனம்: செல்வம் சேர்த்தல்இன்றைக்கு எப்படி வேண்டு மானாலும் பணத்தையும் சொத்துகளையும் சேர்க்கலாம் என்ற எண்ணம் பரவியுள்ளது. இதனால், நாட்டில் ஊழல்களும் முறைகேடுகளும் மலிந்துள்ளன. இந்நிலையில், காந்தி, செல்வம் சேர்ப்பதற்கான முறையான வழி எது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறாரா?காந்தியின் பார்வையில் உழைப்பு இரு வகைப்படும். ஒன்று உடலுழைப்பு, மற்றொன்று மூளை உழைப்பு. மூளை உழைப்பைவிட உடலுழைப்புக்கே முக்கியத்துவம் தந்தார் காந்தி. ஏனெனில், உடலுழைப்பின் மூலம் வரும் செல்வத்தால் மட்டுமே, அதன் முழுமையான மதிப்பை ஒருவர் உணர முடியும் என்று நம்பினார்.உடல் உழைப்பானாலும், மூளை உழைப்பானாலும் 'சமூக அக்கறை, பொதுநலம், நேர்மை ஆகியவற்றை கல்லறையில் புதைத்துவிட்டுச் சேர்க்கும் செல்வம் அனைத்தும், உழைப்பற்ற செல்வமே' என்றார் காந்தியடிகள். காந்தியின் சர்வோதயத்தில், உழைப்பற்ற செல்வம் ஒரு சமுதாயப் பாவமாகும். 'உழைப்பற்ற செல்வம் ஈட்டுபவர்களிடம் சமூக அக்கறை குறைந்தே காணப்படும், அவர்களால் பொதுநலன் கருதி உழைக்க முடியாது' என்பது காந்தியின் கருத்து.காந்தியின் சர்வோதய சித்தாந்தப்படி, பொதுநோக்குடன் உழைப்பவர்கள் இருக்கும் சமூகத்தில், சோம்பேறிகள் இருக்க முடியாது, உழைப்பற்ற செல்வமும் செல்வந்தர்களும் இருக்க மாட்டார்கள். கருப்புப் பணப் பட்டியலில் எவர் பெயரும் இருக்காது.சி.செல்லப்பாண்டியன், உதவிப் பேராசிரியர்