உள்ளூர் செய்திகள்

நனவானது மாணவர்களின் நாசா கனவு!

தினமலர் மாணவர் பதிப்பின் சார்பாக 'வி3 - வினாடி வினா விருது' என்ற பிரமாண்டமான போட்டிகள் நடைபெற்றன. அதன் இறுதிச்சுற்று மற்றும் பரிசளிப்பு விழா தொகுப்பு இதோ...''தினமலர் நாளிதழ், விண்வெளித் துறையில் சிறந்து விளங்கும், 'நாசா' வரை, மாணவர்களை அனுப்புகிறது. இதை, தமிழக அரசு மனதாரப் பாராட்டுகிறது. இந்திய மாணவர்களில், தமிழக மாணவர்கள் தான், 'ஐக்யூ' எனப்படும், அறிவுத் திறனில் சிறந்து விளங்குவதாக, பல மாநில மாணவர்களுக்கு, 'நீட்' பயிற்சி அளித்த பயிற்றுனர் ஒருவர், சமீபத்தில், என்னிடம் தெரிவித்தார்.அவ்வாறான மாணவர்கள், தங்களின் தாய்மொழியான தமிழில் படித்து, சிந்தித்து சிறப்புடன் செயற்படும் வகையில், 'பட்டம்' இதழ் உருவாக்கப்பட்டு, ஒரு லட்சம் மாணவர்களைச் சென்றடைகிறது என்பது, மகிழ்ச்சியாக உள்ளது.இயற்கை வளங்களையும், இயற்கைச் சீற்றங்களையும், செயற்கைக்கோள் வழியாக தெரிந்துகொள்ளும், 'நாசா' நிறுவனத்திற்கு, தமிழக மாணவர்களை அனுப்பும், 'தினமலர்' நாளிதழின் பணியைப் பாராட்டுவதோடு, 'நாசா' செல்லும் மாணவர்களுக்கு, அரசின் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.உலக பணக்காரரான, பில்கேட்ஸ், 'ஏழையாகப் பிறந்தது தவறில்லை; ஏழையாகவே சாவது தான் தவறு' என்றார். அதற்கேற்ப, கல்வி ஒன்று தான், நிரந்தரமான செல்வம். அது தான், ஏழ்மையை விரட்டும். கல்வித் துறையை வளர்க்கும் பணியில், அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு உறுதுணையாக இருக்கும், 'தினமலர்' நாளிதழை, பாராட்டுகிறேன்.தினமலர் மாணவர் பதிப்பின் சார்பில், சென்னையில், கடந்த சனிக்கிழமை நடந்த பிரமாண்ட வினாடி வினா நிகழ்ச்சியில், தமிழக கல்வியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசிய வார்த்தைகள் இவை. 5 மாதங்களுக்கு முன், பிரமாண்ட வினாடி வினா நிகழ்ச்சியை நடத்தப் போவதாகத் தினமலர் மாணவர் பதிப்பு அறிவித்ததுதான் தாமதம். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என்று அனைவரிடமும் ஒருவிதப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம், வினாடி வினா நிகழ்ச்சியில், முதற்பரிசு பெறும் மாணவர்கள், அமெரிக்காவின் நாசாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பதுதான். விண்ணில் பறக்கும் கனவை மெய்ப்பிக்கும் இந்த வாய்ப்பை, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ஏராளமான மாணவர்கள் முன்வந்தனர். எந்த அளவுக்கு என்றால், 106 பள்ளிகளில், 23 ஆயிரம் மாணவர்கள் போட்டியில் பங்கேற்கப் பதிவு செய்தனர். தினமலர் மாணவர் பதிப்பில் வரும் கட்டுரைகளையும் செய்திகளையும் அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. முதற்கட்டத் தேர்வுகளில், சிறப்பாகப் பங்களிப்பு செய்தவர்களில் இருந்து, ஒவ்வொரு பள்ளிக்கும் ஓர் அணி என, மொத்தம் 106 அணிகள் தேர்வாயின. இவர்கள் அனைவருக்கும் இறுதிச் சுற்று கேள்வி பதில் நிகழ்ச்சி தான், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், கடந்த சனிக்கிழமை, நடந்தது. அன்றைய தினமே இறுதிச் சுற்றும் நடத்தி, நாசா செல்லவிருக்கும் மாணவர்கள் யார் என்று அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், பெரும் எதிர்பார்ப்புடன் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் குழுமினர். பிரபல குவிஸ் மாஸ்டர், சுமந்த் சி. ராமன் முழு கேள்வி பதில் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். மூளையைக் கசக்கிக்கொள்ள வைக்கும் அவருடைய கேள்விகளால், நிகழ்ச்சி பெரும் விறுவிறுப்புடன் தொடங்கியது. மாணவர்கள், 25 கேள்விகளுக்கு பதில் எழுத, மிக விரைவாகத் திருத்தி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதில், முதல் 8 இடங்களைப் பெற்ற அணியினர், இறுதிச் சுற்றுக்குத் தேர்வாயினர். இறுதிச் சுற்றுப் போட்டி, 6 கட்டங்களாக நடந்தது. சுமந்த் சி. ராமன் முன்வைத்த கடினமான கேள்விகளையும், மாணவர்கள் அனாயாசமாக எதிர்கொண்டு பதில் அளித்தனர். அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், விளையாட்டு, பொதுஅறிவு என்று கலவையான கேள்விகள், பார்வையாளர்களையும் ரசிக்கும்படி வைத்திருந்தது. கடைசிவரை பரபரப்புக்குப் பஞ்சமில்லாத போட்டியின் முடிவில், 90 மதிப்பெண்கள் பெற்று, போலச்சேரி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தைத் தட்டிச்சென்றனர்.இரண்டாம் இடத்தை, சென்னை செம்பாக்கம் சீயோன் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் பிடித்தனர். மூன்றாமிடத்தை, ஸ்ரீநிகேதன் பாடசாலா பள்ளி மாணவர்கள் பெற்றனர். வரவேற்புரையாற்றிய தினமலர் இணை ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, 'தினமலர் மாணவர் பதிப்பு ஏன் உருவானது?' என்று விளக்கமளித்தார். “ஒரு தந்தையாக இருந்து யோசித்ததுதான், தினமலர் மாணவர் பதிப்பு உருவாக்கத்துக்கான பின்னணி. என் மகள் வளர்ந்ததும், பாடப்புத்தகங்கள் தவிர, தமிழில் படிப்பதற்குரிய விஷயங்கள் இருக்கின்றனவா என்று சிந்தித்தேன். ஆங்கிலத்தில் அதிகமான அறிவுச்செய்திகள் இருந்தாலும், அவை நம் சூழலுக்குப் பொருந்தாமலும், மேற்கத்திய கலாசாரத்தை மையப்படுத்தியதாகவும் உள்ளன. அதனால் தான், தம் தாய்மொழியிலேயே மாணவர்கள் படிப்பதற்குரிய தினசரியாக தினமலர் மாணவர் பதிப்பை உருவாக்கினேன். தற்போது, வெற்றிகரமாக, தினமும், ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல், 'பட்டம்' இதழை வாசித்து வருகின்றனர். இது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார் ஆர். கிருஷ்ணமூர்த்தி. இதன் பின்னர், பட்டம் பதிப்பகப் புத்தக வெளியீடு நடந்தது. இதில் மண்ணின் கலாசாரத்தை அறிய உதவும் மூன்று புத்தகங்களை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட, அதை வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். பெற்றுக்கொண்டார். பின்னர், வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தமிழகக் கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பரிசுகளை வழங்கினார். முதலிடத்தை, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் ஆர்.ஹரிஷ் மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் என்.லக் ஷனா ஆகிய இருவருக்கும் அமெரிக்காவின் நாசாவுக்கு செல்லும் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.இரண்டாமிடம் பெற்ற, சென்னை செம்பாக்கம் சீயோன் மெட்ரிக். பள்ளியைச் சேர்ந்த எம்.பி.தனுஸ்ரீ மற்றும் ஆர்.பெரில் சையனா ஆகியோருக்கு, 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசான 50 ஆயிரம் ரூபாயை, சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள ஆர்.எம். ஸ்ரீநிகேதன் பாடசாலா பள்ளியைச் சேர்ந்த தினேஷ் ஷ்ரவன் மற்றும் ஏ.எஸ்.சாதனாஸ்ரீ பெற்றுக்கொண்டனர். மேலும், வினாடி வினா நிகழ்ச்சிக்கு, மாணவர்களை ஊக்கப்படுத்திய, 13 பள்ளிகளுக்கு, பட்டம் தங்கத்தாமரை விருதுகளும், 61 பள்ளிகளுக்கு, வெள்ளித் தாமரை விருதுகளும் வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற மாணவர் ஹரிஷ் கூறுகையில், ''எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வாளர் ஆக வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால், இதுவரை எந்த விமானத்திலும் சென்றதில்லை. நான் எதிர்பார்க்காத வகையில், நாசா செல்லும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. பெற்றோரின் பணமில்லாமல், என் சொந்த முயற்சியிலேயே இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.வினாடி வினா போட்டிக்காக நிறைய படித்தோம். மற்ற பத்திரிகைகளில் கிரைம், அரசியல் என்று மாணவர்களுக்குத் தேவையில்லாத செய்திகள் இருக்கும். ஆனால், மாணவர்களுக்கு என்று முழுக்க முழுக்க ஒரு பத்திரிகையாக பட்டம் இருக்கிறது.'' என்று தெரிவித்தார்.நெஞ்சில் ஈரம், மூளையில் தீரம்!நிகழ்ச்சியில் பேசிய வெ.இறையன்பு தெரிவித்தது, “பல மாணவர்கள், தங்களின் பாடத்திட்டத்தோடு நிறுத்தி விடக்கூடாது. பல்வேறு நூல்களையும், செய்தித்தாள்களையும் தேடிச்சென்று படிக்க வேண்டும். இந்த வினாடி வினா நிகழ்ச்சியில், மாணவர்கள் உடனுக்குடன் விடை அளித்தது, மிகவும் சிறப்பாக இருந்தது. சில நேரங்களில், மாணவர்கள், பதில் அளிக்க முடியாதபோது, அரங்கில் இருந்த பார்வையாளர்கள், போட்டி போட்டு பதில் அளித்தனர். அறிவு என்பது, ஒரு நேரத்தில் மட்டும் வெளிப்படுகிற ஊற்று அல்ல. அது எப்போதும், ஓடிக் கொண்டே இருக்கிற அருவி. வாழ்க்கை என்பது, ஒரு போட்டியோடு முடிந்துவிடுவது அல்ல. தொடர்ந்து, நீங்கள் பல்வேறு போட்டிகளைச் சந்தித்துக்கொண்டே இருக்கப் போகிறீர்கள். கடைசியில், உங்கள் வாழ்க்கையில், எத்தனை பேருக்கு உங்கள் அறிவால், பயன் உள்ள காரியங்களைச் செய்திருக்கிறீர்கள் என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும். மாறாக, பதக்கங்களோ, பரிசுகளோ அல்ல. நெஞ்சில் ஈரத்தையும், மூளையில் தீரத்தையும் வைத்து, நீங்கள் படிப்பை மேற்கொள்ள வேண்டும்.”பிரேமானந்த் சேதுராஜன், எல்.எம்.இ.எஸ். (LMES) நிறுவனர்: மனப்பாடம் செய்யும் திறமை உள்ளவர்கள், தேர்வில் மட்டுமே வெற்றி பெறுவர். புரிந்து, அனுபவத்தில் படிப்போர் மட்டுமே, எந்தச் சூழலையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !