சுஷ்ஷது கபர்!
'ஷுன்ய புரானா' என்ற இடைக்கால வங்க இலக்கிய நூல், வங்கத்தின் உணவுப்பழக்கம் பற்றிப் பேசுகிறது. குறிப்பாக, அங்கே ஐம்பது நெல் வகைகள் பயிரிடப்பட்டன என்று அந்த இலக்கியம் தெரிவிக்கிறது. அதனாலேயே வங்காளிகளின் உணவுப் பிரியத்தை ஐரோப்பியர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். கரும்பின் தாயகமும் வங்காளம்தான். பண்டைக்கால வங்காளத்தின் புந்த்ரா ராஜ்ஜியத்தில் முதல்தரமான கரும்பு விளைவிக்கப்பட்டது. வங்காளத்தின் பழைய பெயர் 'கௌடா' என்பதாகும். குறிப்பாக, இங்குள்ள பனை மரங்களிலிருந்து எடுக்கப்படும் பனைவெல்லம் மூலம் தயாரிக்கப்படும் வங்க இனிப்பு வகைகள் மிகவும் புகழ்பெற்றவை.பனைவெல்லம், இனிப்புகளுக்குப் பிரத்யேக நறுமணத்தையும், இனிப்புச் சுவையையும் தரும். குறிப்பாக, வங்கத்தின் புகழ்பெற்ற இனிப்பு வகைகளான சந்தேஷ், இனிப்புத் தயிர் போன்றவற்றில் பனைவெல்லம் பயன்படுத்தப்படுகிறது.கசப்பில் ஆரம்பித்து, இனிப்பில் முடிப்பதுதான் இவர்களது உணவு பரிமாறும் வழக்கம். பாகற்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, வாழைக்காய் போன்ற காய்கறிகளை மசாலா விழுதுடன் சேர்த்து அவியல்போல தயாரிக்கிறார்கள். இந்த உணவிற்கு 'சுக்தோ' என்று பெயர். இதுதான் மதிய உணவில் முதலில் பரிமாறப்படும்.அடுத்தது, சாதத்துடன் சூடான நெய், உப்பு, பச்சை மிளகாய் வைக்கப்படும். பின்னர், காய்கறிகள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதால், மசாலா சேர்த்து செய்யப்படும் கறிகாய் வகைகள் போன்றவை பரிமாறப்படுகின்றன. அடுத்ததாக மீன் உணவுகளும், இனிப்பு, புளிப்பு சட்னியும், பொரித்த பப்படமும் பரிமாறப்படும். பிறகு உலர் இனிப்புகள், பாயசம் போன்றவை பரிமாறப்பட, விருந்து இனிதே நிறைவுபெறும். நம்மூரைப் போலவே விருந்துக்குப் பிறகு, வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் அங்கேயும் உண்டு. வங்காளிகள் என்றாலே 'ரசகுல்லா' பிரியர்கள் என்பதை நாங்கள் சொல்லவும் வேண்டுமா!தலைப்புக்கும் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?தலைப்புக்கு என்ன பொருள் என்று யோசிக்கிறீர்களா? 'சுவையான உணவு' என்பதைத்தான் பெங்காலியில் எழுதியிருக்கிறோம்!- கொக்கோ