உள்ளூர் செய்திகள்

தமிழே அமுதே - எந்த சொல்லுக்கு எந்த ல, ழ, ள?

எழுதும்போதுதான் பல சொற்களின் சரியான வடிவம் எது என்பதில் குழப்பம் வரும். பேசும்போது நாம் எழுத்து வடிவத்தில் எதையும் பதிவதில்லை. நாம் நினைத்தவாறு பேசிவிட்டுச் செல்கிறோம். ஆனால், எழுத்தில் அவ்வாறு கடந்து செல்ல முடியாது. ஒரு சொல்லை முறையான எழுத்துகளைக்கொண்டு எழுத வேண்டும்.தமிழில் ஒலிப்பு ஒற்றுமையில் ல, ழ, ள - ந, ண, ன - ர, ற இருக்கின்றன. இவற்றுக்கிடையேதான் பெரும்பான்மையான தவறுகள் ஏற்படுகின்றன. அறியாமை மிக்கிருந்தால் குறில், நெடில் எழுத்துகளுக்கிடையே பிழைகள் தோன்றும். அடுத்த நிலைத் தவறுகள் தாம் ஒற்றுப்பிழைகள். அதற்கும் அடுத்துள்ளவை, சொற்பயன்பாட்டில் நேரும் பிழைகள். தொடக்க நிலையில் இவற்றைத் தாண்டிய பிழைகள்வர வாய்ப்பில்லை. இப்பிழைகளைக் களைந்து எழுத உதவும் வழிமுறைகளைப் பார்ப்போம். முதலில் ல, ழ, ள எழுத்துகளைப் பற்றிப் பார்ப்போம். தமிழின் சிறப்பான சொற்கள் சிறப்பு ழகரத்தில் அமைந்திருக்கும். தமிழ், அமிழ்து, குமிழ், பழம், வாழை, வாழ்த்து, ஆழம், முழம், ஊழ், ஏழை, மாழை, கூழ், தாழை, குழல், குழந்தை, பாழ், மழை - இந்தச் சொற்களைப் பாருங்கள். யாவும் சிறப்பான சொற்கள். தமக்குள் மிகுந்த பொருள்வளம் கொண்டவை. அதனால் சிறப்பு ழகரப் பயன்பாட்டில் தோன்றின. சிறப்பு ழகரம் இடம்பெறும் சொல், தூய தமிழ்ச்சொல் என்று கண்ணை மூடிக்கொண்டு கூறிவிடலாம். ஒரு சொல்லில் குறில் எழுத்தினை அடுத்து வரும் எழுத்தாகச் சிறப்பு ழகர மெய்யெழுத்து தோன்றாது. ஐகார வரிசை எழுத்துகளை அடுத்துத் தோன்றுவதையும் காணமுடியவில்லை. பொதுவான சொற்களில் லகர எழுத்துகள் பயிலும். லகர எழுத்துகள் வரும் சொற்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும். தொடர்பயன்பாடு உள்ள சொற்கள் அவை. பாடல், மணல், வால், பால், தோல், ஆல், மேல், ஆலை, தோல், தொல்லை, முல்லை, பகல், வேலை, காலை, மாலை. எளிமையாகச் சொல்லிச் செல்வதற்கு லகர எழுத்துகள் உதவுகின்றன. அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல்லில் வரும் லகரம், ஒலிப்பை எளிமையாக்குகிறது. இவ்விரண்டுக்கும் இடையிலுள்ளது ளகரம். சிறப்பு ழகரம் போன்றும் ஒலிக்கத் தேவையில்லை. அதே நேரத்தில் எளிமையான லகரத்திலும் ஒலிக்கக் கூடாது. சிறப்புக்குச் சிறப்பாகவும் எளிமைக்கு எளிமையாகவும் உள்ள சொற்களில் இவ்வெழுத்துகள் பயிலும். பள்ளி, பாளை, காளை, வேளை, முள், குளம், வளம், நாளை, உள்ளம், பள்ளம், கள்ளம், வெள்ளம், தேள். இச்சொற்கள் அவற்றுக்குரிய பொருளுணர்த்தும் பொருள்களில் தலைசிறந்தவை என்றும் சொல்ல முடியாது. ஆனால், எளிமையாகவும் கருத முடியாது. மூன்று வகை ல,ழ,ள-கரங்களும், தாம் பயின்று வரும் சொற்களில் உணர்த்தும் பொருளிலும் சிறப்பு, பொது, இடைநிலை என்ற அமைப்பில் வழங்கக் காணலாம்.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !