தமிழே அமுதே - ஒன்றை எழுதுவதற்கான விதிகள்
எண்களை எழுத்தால் எழுதுவதற்குப் பல நுணுக்கங்கள் இருக்கின்றன. 'ஒன்று' என்ற எண்ணை எழுத்தால் எழுதுவதற்குரிய விதிகளை இங்கே பார்க்கலாம். * ஒன்று என்னும் எண்ணுப் பெயர், ஒரு பெயர்ச்சொல்லுக்கு முன்னே வராது. ஆனால், பின்னே வரும். ஒன்று புத்தகம், ஒன்று வீடு, ஒன்று பாட்டு என்று வரக்கூடாது. ஆனால் பெயர்ச்சொல்லுக்குப் பின்னால் ஒன்று வரும். புத்தகம் ஒன்று, வீடு ஒன்று, பாட்டு ஒன்று என்று வரலாம்.* ஒன்று என்ற சொல், பெயர்ச்சொல்லுக்கு முன்னே வர நேர்ந்தால், அது 'ஒரு' என்று மாறிவிடும் (ஒரு புத்தகம், ஒரு வீடு). * அந்தப் பெயர்ச்சொல் உயிர்மெய் எழுத்தில் தொடங்கினால், அந்தப் பெயரின் முன்னே 'ஒரு' என்று வரவேண்டும் (ஒரு கல்லூரி, ஒரு பாட்டு).* பெயர்ச்சொல் உயிரெழுத்தில் தொடங்கினால், 'ஒரு' வரக்கூடாது. 'ஓர்' என்று வரவேண்டும் (ஓர் அருவி, ஓர் எழுத்து).* ஒன்று என்னும் எண்ணுப் பெயர், வினைச்சொல்லுக்கு முன்னால் வரலாம். ஒன்று செய்தான், ஒன்று கூறினான், ஒன்று மறந்துவிட்டது. * ஒன்று என்ற சொல், எண்வரிசைப் பொருளில் வரும் எனில், அதனோடு 'ஆம், ஆவது' போன்ற சாரியைகளைச் சேர்க்க வேண்டும் (ஒன்றாம் வகுப்பு, ஒன்றாம் பாடம், ஒன்றாவது செய்யுள்).* ஓர் என்பதோடும் 'ஆம்' சாரியை சேர்ப்பது உண்டு (ஓராம் கிரகம்). ஆனால், அது பெருவழக்காக இல்லை. * ஒன்றோடு ஆம், ஆவது போன்ற சாரியைகளைச் சேர்த்து எழுதுமிடத்தில், முதல் என்ற சொல்லையும் கருதலாம். 'ஒன்று' என்பதற்கு மாற்றாக 'முதல்' என்றும் எழுதுவர். முதல் வகுப்பு, முதல் தலைமுறை, முதல் தேர்வு, முதல் மாணாக்கர், முதலாம் வகுப்பு, முதலாவது தலைமுறை.* பத்தோடு ஒன்று சேர்கையில், அது பதினொன்று என்று அழைக்கப்படும். பத்து + இன் + ஒன்று என்பதன் சேர்க்கையே, பதினொன்று. பத்து, பது என்று ஆகும். பது+இன்+ஒன்று = பதினொன்று (இங்கே இன் என்பது சாரியை).* ஒரு, ஓர் பயன்படுத்து வதற்குரிய நிலைப்பாடு பதினொன்றுக்கும் பொருந்தும். உயிர்மெய்யெழுத்து வந்தால், 'பதினொரு' என்று வரவேண்டும். உயிரெழுத்தின் முன் 'பதினோர்' என்று வரவேண்டும். பதினொரு கட்டளைகள், பதினோர் அடிகள்.* பதினொன்று, பதினொரு, பதினோர் என்றுதான் வரவேண்டும். 'பதினோரு' என்று வரவேகூடாது. பதினோருயிர்கள் என்று இருப்பின் அது 'பதினோர் உயிர்கள்' என்பதிலிருந்து வந்ததை அறிக.- மகுடேசுவரன்