உள்ளூர் செய்திகள்

தமிழே அமுதே - எட்டாவதா, எட்டுவதா?

“பையன் எத்தனாவது படிக்கிறான்?” “இந்தப் புத்தகத்தை நான் இரண்டாவது முறை படிக்கிறேன்.”“அவர் வீட்டிலிருந்து நான்காவது வீடு நம்ம வீடு.”இந்தத் தொடர்களை எல்லாம் பாருங்கள். ஓர் எண் பெயர், அதனை அடுத்து ஆவது என்ற சொல் வருகிறது.கேள்வியிலேகூட 'எத்தனை ஆவது' என்று வந்துவிடுகிறது. அதனை 'எத்தனாவது' என்று ஒலிக்கிறோம்.ஆவது என்கிற இடைச்சொல், சாரியைபோல் பயில்வது. தனித்து வந்தால் இந்தச் சொல்லுக்கு 'ஆகுவது' என்ற பொருள் வந்துவிடும். எண் பெயர்களோடு ஒட்டி வந்தால், அந்த வரிசைக்குரிய நிலையைச் சுட்டும்.சாரியை என்பது ஒரு சொல்லைச் சார்ந்து வருவது. தனியே அதற்குப் பொருள் இல்லை. புளியங்காய் என்பதில் புளி+அம்+காய். இதில் அம் என்பதுதான் சாரியை. அதுபோல், எட்டாம் வகுப்பு, எட்டாவது வகுப்பு ஆகியவற்றில் ஆம், ஆவது சாரியைகள்.அடிக்கடி நாம் எண்களை எழுதிச் செல்ல வேண்டி வரும். அப்போது ஆம், ஆவது போன்றவை ஓர் எண்ணோடு ஒட்டி வந்தால், சுருக்கமாக எழுதப் பார்ப்போம். எட்டாம் தேதி என்பதை 8ம் தேதி என்று எழுதுவோம். மூன்றாவது மாடி என்பதை 3வது மாடி என்போம்.இவ்வாறு எழுதுவது தவறு. எண்ணைத் தனியாகக் காட்டிய பிறகு, ஆம், ஆவது போன்றவற்றை முறையாகவே எழுதிக் காட்ட வேண்டும்.8ஆம் தேதி, 3ஆவது மாடி என்றே எழுத வேண்டும்.நம்மில் பலர் இந்தப் பிழைகளைத் தொடர்ந்து செய்கிறோம். 8ம் என்று எழுதினால் எட்டும் என்ற பொருளாகிவிடும். 8வது என்று எழுதினால், எட்டுவது என்று எடுத்துக்கொள்ள இடமுண்டு.எண்களைக் குறிப்பிட்டு எழுதும்போது, ஆம், ஆவது போன்றவற்றை முழுமையாக எழுத வேண்டும்.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !