தமிழே அமுதே - ஊர்ப்பெயர்களில் மாற்றம்
பேச்சு வழக்கில் ஒரு சொல்லைச் சொல்லும்போது விரைந்து கூறப் பார்ப்போம். அதன் திருத்தமான வடிவம் நமக்குத் தெரியும் என்றாலும் பேச்சினில் பின்பற்றுவதில்லை. சொல்லினுடைய இன்றியமையாத பகுதி ஒலிப்பினில் மறைந்துவிடும்.ஆட்பெயர்களும் ஊர்ப்பெயர்களும் இத்தகைய ஒலிப்பு முறைகளால் பெரிதும் மாறி நிற்பவை. சங்கரபாண்டி - சங்கராண்டி ஆவதும் சுப்பிரமணி-சுப்புணி ஆவதும் ஒருவகைச் செல்ல விளிகள். ஆட்பெயர்களைக்கூட எழுதும்போது ஒருவர் திருத்தமாய் எழுதிக்கொள்ள இயலும். ஆனால், ஊர்ப்பெயர்கள் பலராலும் சொல்லப்பட்டு அவ்வாறே பரவிவிடுகின்றன.'நாகர்கோவில்' என்கின்ற ஊர்பெயர் பேச்சு வழக்கினில் 'நாரோயில்' ஆகிவிட்டது.'திருநெல்வேலி என்பது 'திர்னவேலி' ஆகிவிட்டது. 'திருத்துறைப்பூண்டி என்பது பேச்சு வழக்கில் 'தித்தறப்பூண்டி'தான். 'கும்பகோணம்' என்று திருத்தமாய்ச் சொல்வது அரிதுதான், 'கும்மோணம்' என்கிறார்கள். 'கோயம்புத்தூர்' கோயமுத்தூர் ஆகிவிட்டது.பேசும்போது நேரும் இந்தத் திரிபும் மருவலும் அசைகெடலும் இயல்பு தான். இதன் தீய விளைவு என்னவென்றால் ஓர் ஊரின் திருத்தமான பெயர் மக்களிடம் மறந்துபோகும். கோயம்புத்தூரை எப்படி எழுதுவது என்கின்ற குழப்பம் ஏற்படும்.கோயமுத்தூர் என்றே எழுதத் தொடங்குவார்கள். பேச்சு வழக்கின் கொச்சை, எழுத்து வழக்கிற்கும் வந்துவிடும். பெயரின் எழுத்து வடிவம் தெளிவில்லாதபோது 'கோவை' என்று சுருக்கமாக எழுதிக் கடப்பார்கள். ஊர்ப்பெயரை எழுதத் தொடங்கியபோது தான்.இவ்வாறு வழங்குவதில் இன்னோர் இடர்ப்பாடு ஒன்று உண்டு. பேச்சு வழக்கினையே திருத்தமான வழக்கினைப்போல் கருதுவதுதான் அது. 'திருவாடுதுறை என்ற பெயரைப் பாருங்கள். இது பேச்சு வழக்கிற்கு இரையான பெயர்போலவே தெரியவில்லை. திருத்தமான வடிவமாகத்தான் தெரிகிறது. ஆனால், அதன் திருத்தமான பெயர் 'திருவாவடுதுறை' என்பது தான். திரு ஆவடுதுறை என்பதன் சேர்க்கை. இப்படிப் பல பெயர்கள் திருத்தமான வடிவம்போலவே 'செங்கழுநீர்ப்பட்டு என்ற அழகான பெயர் 'செங்கல்பட்டு' என்று எழுத்தில் நிலைத்தது எப்படி? பேச்சு வழக்கினை எழுத்திற்குக் கொண்டுவந்து அதனையே பின்பற்றியதால் தான். 'வானவன்மாதேவி' என்னும் பெயர் மறந்துபோய் 'மானாமதி' ஆனது எப்படி? பேச்சு வழக்கில் வழங்குவதே அவ்வூர்ப்பெயர் என்று நிலைபெற்றுள்ளன. நினைத்து எழுதத் தொடங்கியதால் தான். 'பொழில்வாய்ச்சி' எப்படிப் பொள்ளாச்சி ஆகியிருக்கும்?ஊர்ப்பெயர்களின் திருத்தமான வடிவங்களை எழுதுவதுதான் சிறப்பு.- மகுடேசுவரன்