தொட்டிக் கட்டு வீடு
கொங்கு மண்டலம் எனப்படும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொட்டிக் கட்டு வீடுகள் முன்பு பரவலாக இருந்தன. வீட்டின் நடுவில் தொட்டி போன்ற அமைப்பு இருப்பதால், இந்த வீடுகள் தொட்டிக் கட்டு வீடுகள் என அழைக்கப்படுகின்றன.ஓடுகளால் வேயப்பட்ட, நான்கு புறமும் சூழப்பட்ட சதுரம் அல்லது செவ்வக வடிவில் வீடு அமைந்திருக்கும். நான்கு வீடுகளின் நடுவில் முற்றம் இருக்கும். முற்றமானது, பள்ளமாக, மழைநீர் தேங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். நான்கு புறமும் கூரைகளில் இருந்து வழியும் மழைநீர், இங்கு நிறையும்.இந்தத் தொட்டி போன்ற அமைப்பிலிருந்து, மழைநீர் வெளியேற, வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண் மக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையைப் பறைசாற்றும் விதமாக, இந்தத் தொட்டிக் கட்டு வீடுகள் அமைந்திருந்தன. இந்த வகை வீடுகளின் சுவர்கள், சுண்ணாம்பு, மணல் கொண்டு உறுதியாக உருவாக்கப்பட்டன.இப்பகுதி மக்களின், கலாசாரத்தை வெளிக்காட்டும் விதமாக இவ்வீடுகள் அமைந்திருந்தன. பெரும்பாலும் ஒரு பிரதான வாயில் உண்டு. சில வீடுகளுக்கு இரண்டு பிரதான வாயில்கள் இருக்கும். வீடுகள் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே வாயில் கதவு வழியாகத்தான் வந்து செல்ல முடியும். வேளாண் மக்கள் என்பதால், விவசாய விளைபொருட்களைச் சேமிக்கும் இடமாகவும் இந்த வீடுகள் பயன்பட்டன.கூட்டுக் குடும்ப முறை அருகி வருவதாலும், நகரமயமாக்கலாலும் இவ்வகை வீடுகள் பெரும்பாலும் அழிந்துவிட்டன.